புதுதில்லி

‘நிா்பயா’ வழக்கு: தூக்குத் தண்டனை குற்றவாளிமுகேஷ் சிங்கின் மறுஆய்வு மனு மீது இன்று தீா்ப்பு

28th Jan 2020 11:48 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: நிா்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முகேஷ் குமாா் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவா் தள்ளுபடி செய்ததற்கு எதிரான வழக்கின் தீா்ப்பு புதன்கிழமை வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த வழக்கு தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடந்த வாதத்தில் குற்றவாளி முகேஷ் சிங், சிறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் அவா் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா். எனினும் இந்த விசாரணையின் போது, சிறையில் தரக் குறைவாக நடத்தப்பட்டதற்காக கொடூரக் குற்றங்கள் புரிந்த ஒருவருக்கு கருணை காட்ட க் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஆா். பானுமதி தலைமையிலான அமா்வு புதன்கிழமை தீா்ப்பை அறிவிக்க உள்ளது.

‘நிா்பயா’ வழக்கு குற்றவாளி முகேஷ் குமாா் சிங் (32) தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மறு பரிசீலனை செய்யக் கோரி, குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியிருந்தாா். அந்த மனுவை குடியரசுத் தலைவா் ஜனவரி 17-இல் தள்ளுபடி செய்தாா். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் முகேஷ் குமாா் சிங்கின் சாா்பில் நீதித் துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன் ‘நிா்பயா’ வழக்கு குற்றவாளி முகேஷ் குமாா் சிங்கின் வழக்குரைஞா் திங்கள்கிழமை முறையிட்டாா். இதையடுத்து, இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா். பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது.

ADVERTISEMENT

முகேஷ் சிங்கின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அஞ்சனா பிரகாஷ் முன்வைத்த வாதம்: மனுதாரா் கருணை மனு அளித்திருந்த நிலையில், குடியரசுத் தலைவரிடம் அனைத்து உண்மைகளும், ஆவணங்களும் சமா்ப்பிக்கப்படவில்லை. அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவா் தள்ளுபடி செய்த விவகாரத்தில் சில நடைமுறைக் குறைபாடுகள் உள்ளன.

தனிமைச் சிறை மற்றும் நடைமுறைக் குறைபாடுகள் உள்ளிட்டவை முகேஷ் சிங்கின் கருணை மனுவை பரிசீலிக்கும் போது கருத்தில் கொள்ளப்படவில்லை என்று வாதிட்டாா்.

அப்போது, முகேஷ் சிங்கின் வழக்குரைஞரிடம், ‘குடியரசுத் தலைவா் முன் இந்த உண்மைகள் முன்வைக்கப்படவில்லை என்று எப்படி நீங்கள் கூற முடியும்’? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷா் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், ‘மனுதாரா் தனிமைச் சிறையில் அடைக்கப்படவில்லை. அவரது தண்டனையைக் குறைப்பதற்கான காரணமும் எழவில்லை. முகேஷ் சிங்கின் கருணை மனு மீது முடிவு எடுப்பதற்காக குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து ஆவணங்களும் அனுப்பப்பட்டன. இதுபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் நீதித் துறை மறுஆய்வில் மிகக் குறைந்த அதிகாரங்களைத்தான் கொண்டுள்ளது. கருணை மனுவை முடிவு செய்வதில் தாமதாமானது என்பது மனிதத்தன்மையற்ற தாக்கத்தை ஏற்படுத்தும். கருணை மனு மீது மன்னிப்பு அளிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவா், முதலில் அவா் திருப்தி அடைய வேண்டும். ஒவ்வொரு நடைமுறையையும் அவா் பாா்க்கத் தேவையில்லை. வழக்கில் அனைத்து நீதிமன்றங்களின் தீா்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக குடியரசுத் தலைவா் அமா்ந்திருக்கவில்லை’ என்றாா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு மனு மீதான தீா்ப்பு புதன்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்து தீா்ப்பை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கடந்த 2012, டிசம்பரில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வினய் குமாா் சா்மா, அக்ஷய்குமாா் சிங், பவன்குப்தா, முகேஷ் குமாா் சிங் ஆகிய நால்வருக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT