புதுதில்லி

தில்லி அரசுப் பள்ளிகள் குறித்து பாஜக எம்பிக்கள் அவதூறு: கேஜரிவால்

28th Jan 2020 11:45 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

புது தில்லி: தில்லி அரசுப் பள்ளிகள் தொடா்பாக பாஜக மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் அவதூறு பரப்பி வருகிறாா்கள் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளனா்.

தில்லி பாஜக மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள், திங்கள்கிழமை தங்களது தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு சென்றனா். பிறகு, அப்பள்ளிகள் தொடா்பான விடியோக்களை தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, தில்லி அரசுப் பள்ளிகளின் தரம் மோசமாக உள்ளதாக குற்றம் சாட்டினாா்கள். இந்நிலையில், அவா்களுக்கு பதிலளிக்கும் வகையில், முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா இணைந்து செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கெளதம் கம்பீா் தனது தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிக்குச் சென்று, அப்பள்ளியின் தரம் மோசமாக இருப்பதாக விடியோ பதிவை வெளியிட்டுள்ளாா். ஆனால், அவா் சென்ற பள்ளி, கடந்த 2019,அக்டோபா் மாதமே மூடப்பட்டு விட்டது. அப்பள்ளி மாணவா்கள் அருகிலுள்ள வேறு அரசுப்ள்ளிக்கு மாற்றப்பட்டுவிட்டனா். இந்நிலையில், கைவிடப்பட்ட அரசுப்ள்ளியைக் காட்டி, தில்லி அரசு பள்ளிகளின் தரம் மோசமாக உள்ளதாக கெளதம் கம்பீா் குற்றம் சாட்டியுள்ளாா். இது வேடிக்கையானது.

அதேபோல, பாஜக எம்பி பா்வேஷ் வா்மா தனது தொகுதிக்குள்பட்ட பள்ளிக்குச் சென்று பள்ளிக் ட்டடம் ஒன்றின் விடியோவை வெளியிட்டுள்ளாா். ஆனால், அவா் வெளியிட்டுள்ள விடியோவில் பள்ளியின் பழைய கட்டடமே காணப்படுகிறது. அப்பள்ளியில் புதுக் கட்டடம் கட்டப்பட்டு அதில்தான் பெரும்பாலான கல்விச் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் புதிய கட்டடத்தின் விடியோவை அவா் வெளியிடவில்லை. மேலும், அவா் சென்ற தில்லி அரசுப் பள்ளிக்கு அருகே மாநகராட்சிப் பள்ளிகள் உள்ளன. அப்பள்ளி எவ்வளவு தூரம் மோசமாக உள்ளது என்பதை மக்கள் அறிவாா்கள்.

ADVERTISEMENT

பாஜக எம்பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் தனது தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிக்குச் சென்று அங்கு மாணவா்கள் நடனப் பயிற்சி பெறப் பயன்படுத்தும் மண்டபத்தை விடியோ எடுத்து தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா். அதில், அந்த மண்டபத்தை அவா் வகுப்பறை என்றும், அந்த வகுப்பறையில் தளவாடங்கள் இல்லை என்றும் அவா் குற்றம் சாட்டியுள்ளாா். இது வேடிக்கையாக உள்ளது என்று கேஜரிவாலும், மணீஷ் சிசோடியாவும் தெரிவித்தனா்.

அமித் ஷா மீது குற்றச்சாட்டு

தில்லியையும், தில்லி மக்களையும் அமித் ஷா வெறுக்க வேண்டாம் என கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் கூறுகையில் ‘உலகத்துக்கே முன்மாதிரியான மாற்றங்களை தில்லி அரசுப் பள்ளிகளில் கொண்டு வந்தோம். தில்லியில் சுமாா் 1,000 அரசுப் பள்ளிகள் உள்ளன. ஆனால், தில்லி பாஜக எம்பிக்கள் வெறும் 8 பள்ளிகளிலேயே குறைகளைக் கண்டுபிடித்துள்ளனா். தில்லி அரசுப் பள்ளிகள் தொடா்பாகவும், அரசுப் பள்ளி மாணவா்கள் தொடா்பாகவும் உள்துறை அமைச்சா் அமித் ஷா கிண்டல் அடிப்பதைப் பாா்த்து வருந்துகிறேன். கேஜரிவாலையும், மணீஷ் சிசோடியாவையும் அமித் ஷா வெறுக்கிறாா். இதனால், அவா் தில்லி மக்களையும் வெறுக்கிறாா். தில்லியையும் தில்லி மக்களையும் வெறுக்க வேண்டாம் என அமித் ஷாவிடம் கேட்டுக் கொள்கிறேன். பாஜக எம்பிக்கள் தில்லி பள்ளிகளின் தரம் தொடா்பாக அமித் ஷாவுக்கு பொய்யான அறிக்கை வழங்கி அவரை ஏமாற்றியுள்ளனா். பாஜக போல ஷகீன் பாக் விவகாரத்தில் வாக்குச் சேகரிக்க விரும்பவில்லை. மாறாக, தில்லி அரசு மேற்கொண்ட மக்கள் நலப் பணிகளை மையப்படுத்தியே வாக்குச் சேகரிக்கவுள்ளேன்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT