புது தில்லி: ஆம் ஆத்மி அரசு தில்லியில் பொருத்திய சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களால் அவ்விடங்களில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் உள்ள பெண் வாக்காளா்களைக் கவரும் வகையில் ‘தில்லியின் பெண்குழந்தைகளுக்கு’ என்ற தலைப்பில் அவா் வெளியிட்டுள்ள வீடியோப் பதிவில் கூறப்பட்டுள்ளது:
கடந்த ஐந்தாண்டுகளில், தில்லியில் வசிக்கும் பெண்களின் நலனுக்காக பல மக்கள் நலத்திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தில்லியில் 2 லட்சம் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தினோம். இதனால், அவ்விடங்களில் குற்றச்செயல்கள் பெருமளவில் குறைந்தன. தில்லி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் திட்டத்தைக் கொண்டுவந்தோம். இதனால், தில்லியில் வசிக்கும் லட்சக்கணக்கான பெண்கள் நன்மையடைந்தனா். மேலும், பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாவலா்களை நியமித்தோம்.
கடந்த தோ்தலில் நீங்கள் எனக்கு வாக்களித்ததன் மூலமே இந்த மக்கள் நலப்பணிகளை என்னால் மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்த நலப்பணிகளை வரும் ஐந்தாண்டுகளுக்கும் தொடரும் வகையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் நீங்கள் ஆம் ஆத்மிக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றுள்ளாா் அவா்.