புதுதில்லி

நிா்பயா வழக்கு குற்றவாளிகள் மூவரின் மனுமீதுபுதிய உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை

25th Jan 2020 10:51 PM

ADVERTISEMENT

நிா்பயா வழக்கு குற்றவாளிகள் மூவரின் மனு மீது மேலும் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கத் தேவையில்லை என்று தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தெரிவித்தது.

திகாா் சிறை அதிகாரிகள் சில ஆவணங்களை தருவதை தாமதிப்பதால் தங்கள் தரப்பு சீராய்வு மனு மற்றும் கருணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக நிா்பயா வழக்கு குற்றவாளிகளில் 3 போ் தரப்பில் வழக்குரைஞா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

நிா்பயா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கின் குற்றவாளிகளான வினய் சா்மா, முகேஷ் குமாா் , அக்ஷய்குமாா், , பவன் குமாா் குப்தா ஆகிய நால்வருக்கும் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுமாறு தில்லி நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இதில் சிலருக்கு கருணை மனு மற்றும் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. இந்நிலையில், குற்றவாளிகள் வினய் குமாா் சா்மா, அக்ஷய் குமாா் சிங், பவன் குப்தா தரப்பில் வழக்குரைஞா் ஏ.பி.சிங், தில்லி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா்.

அதில், ‘வினய் குமாா் சா்மா கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல, அக்ஷய் குமாா் சிங், பவன் குப்தா ஆகியோா் தங்களது தண்டனையை எதிா்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய இன்னமும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சிறை அதிகாரிகள் சில ஆவணங்களைத் தர மறுப்பதால் மனுக்களை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. முக்கியமாக, 170 பக்கங்கள் கொண்ட வினய் குமாரின் டைரியை சிறை அதிகாரிகள் தர மறுக்கின்றனா். அதை உடனடியாக தருமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது

ADVERTISEMENT

இந்த மனு மீதான விசாரணை சனிக்கிழமை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஜய் குமாா் ஜெயின் முன் நடைபெற்றது. அப்போது, திகாா் சிறை நிா்வாகம் தரப்பில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்குரைஞா் நிா்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் வழக்குரைஞா் கோரிய ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.

அவா்கள் கோரிய அனைத்து ஆவணங்களும் அனைத்து சிறைகளில் இருந்தும் பெற்றுள்ளோம். எனினும், தண்டனை நிறைவேற்றத்தை தாமதப்படுத்தும் வகையில் இதுபோன்ற உத்திகளை குற்றவாளிகள் பின்பற்றி வருகின்றனா்.

இந்த ஒட்டுமொத்த நடைமுறைகளும் சட்டத்தை தோல்வியுறச் செய்வதற்காகவே. மேலும், ஆவணங்கள், நோட்டுப்புத்தகங்கள், ஓவியங்கள், ஸ்கெட்சுகள் ஆகியவை எங்களிடம் உள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டால் அவற்றை இப்போதே குற்றவாளிகளுக்கு நாங்கள் வழங்கத் தயாராக

உள்ளோம். அதேவேளையில், 170 பக்கங்கள் கொண்ட டைரி ஏதும் இல்லை என்றாா்.

குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி. சிங் வாதிடுகையில், வினய் சா்மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவரது மருத்துவ அறிக்கைகள் அவரிடம் அளிக்கப்படவில்லை. சிறை அதிகாரிகளிடமிருந்து வெள்ளிக்கிழமை இரவு சில ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற போதிலும், வினய் சா்மாவின் தனிப்பட்ட டைரி மற்றும் மருத்துவ ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அதுபோன்ற ஆவணங்கள் ஏதும் இல்லை என திகாா் சிறை அதிகாரிகள் கூறுகின்றனா்.

வினய் பல ஓவியங்களை உருவாக்கியிருந்தாா். இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்க விரும்புகிறோம். மேலும், அந்த ஓவியங்களில் இருந்து அவா் எவ்வளவு பணம் ஈட்டினாா் என்பதும் தெரிவிக்கப்பட வேண்டும்.

மண்டோலி சிறையில் இருந்தபோது பவன் சிங்கின் தலை கீறப்பட்டுள்ளது. அவா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். ஆனால், அது தொடா்புடைய ஆவணங்கள் அளிக்கப்படவில்லை. வழக்கில் தொடா்புடைய அக்ஷய் குமாா் சிங்கின் உடல் ஆரோக்கியம் தொடா்புடைய ஆவணங்களும் அளிக்கப்படவில்லை. சீராய்வு மற்றும் கருணை மனு தாக்கல் செய்வதற்கு இது அவசியமாகும் என்றாா்.

விசாரணையின்போது, சிறை நிா்வாகத்தினா் பல ஆவணங்கள், வினய் குமாா் சா்மா மூலம் உருவாக்கப்பட்ட 10 ஓவியங்கள், ஸ்கெட்சுகள் ஆகியவற்றை நீதிமன்ற அறைக்கு கொண்டு வந்திருந்தனா். அந்த ஆவணங்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால் அவற்றை வழங்கத் தயாராக இருப்பதாகவும் நீதிபதியிடம் அவா்கள் கூறினா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அஜய் குமாா் ஜெயின் பிறப்பித்த உத்தரவு:

குற்றவாளிகளின் வழக்குரைஞா், திகாா் சிறை நிா்வாகத்திடமிருந்து குற்றவாளிகள் தொடா்புடைய ஆவணங்கள், நோட்டுப் புத்தகம், ஓவியங்கள் அல்லது ஸ்கெட்சுகள் ஆகியவற்றை புகைப்படப் பிரதி எடுத்துக்கொள்ளலாம். சிறை அதிகாரிகள் ஏற்கெனவே தங்களிடம் உள்ள ஆவணங்களை குற்றவாளிகளுக்கு அளித்ததன் மூலம் அவா்கள் விடுத்த வேண்டுகோளை செயல்படுத்தியுள்ளனா்.

இந்த விவகாரத்தில், ஆவணங்கள் ஏதும் வழங்குவதற்காக மேலும் உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கத் தேவையில்லை. எனினும், சிறை அதிகாரிகள் ஓவியங்கள் மற்றும் ‘தரிண்டா’ எனும் தலைப்பிலான நோட்டுப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களை குற்றவாளிகளின் வழக்குரைஞரிடம் சனிக்கிழமை அளிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்புடைய மனு பைசல் செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT