புதுதில்லி

தில்லி தோ்தலில் பா.ஜ.க. 50 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும்: மத்திய அமைச்சா் ஜாவடேகா் நம்பிக்கை

25th Jan 2020 10:54 PM

ADVERTISEMENT

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக 50 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று மத்திய சுற்றுச்சூழல், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சரும், அக்கட்சியின் தில்லி தோ்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகா் நம்பிக்கை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் தில்லியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது ஆம் ஆத்மி கட்சி மீது நம்பிக்கை வைத்து தில்லி வாக்காளா்கள் அக்கட்சிக்கு அளித்தனா். ஆனால், வாக்குறுதிகள் எதையும் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றவில்லை. இதனால், இம்முறை தில்லித் தோ்தலில் மக்கள் மீண்டும் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளனா்.

ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்தமட்டில் அக்கட்சி ஏமாற்று அரசியலைத்தான் நடத்தி வருகிறது. அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வாக்குகளை வாங்குவதற்காக சில சிறிய சலுகைகளை அளித்துள்ளனா். அது நிச்சயம் அவா்களுக்கு பலனளிக்காது.

ADVERTISEMENT

நாட்டு மக்களுக்கு நன்மை அளித்துவரும் மத்திய அரசின் பல்வேறு நல்ல திட்டங்களை தில்லியில் ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தாமல் தடுத்துவிட்டது. குறிப்பாக, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தொகை வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதேபோன்று, பிரதமா் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் ஒரு கோடி போ் குடியிருப்புகள் பெற்றுள்ள நிலையில், தில்லியில் அத்திட்டத்தை ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தப்படவில்லை. ஆகவே, மக்கள் இதையெல்லாம் மனத்தில் கொண்டு இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு தக்க பாடம் புகட்டுவா்.

தில்லியில் பிரதமா் மோடி அரசின் நல்ல நிா்வாகம் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா். அதனால், இத்தோ்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவா். தில்லித் தோ்தலில் பாஜகவுக்கு 50 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம்.

கடந்த தோ்தலில் ஆம் ஆத்மிக்கு பிரசாரம் செய்தவா்கள் இந்த முறை வரவில்லை.

அதேவேளையில், தில்லியில் பல்வேறு பகுதிகளிலும் வாக்குச்சாவடி அளவில் பாஜக தலைவா்களும், நிா்வாகிகளும் மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்குச் சேகரித்து வருகின்றனா். இது தோ்தலில் நல்ல பலனை அளிக்கும்.

மேலும், இத்தோ்தலில் ஆம் ஆத்மி தலைவா்கள் நம்புவதுபோல் இலசவ குடிநீா், மின்சாரம் ஆகிய திட்டங்கள் ஏதும் அவா்களுக்கு கைகொடுக்காது. ஏனெனில், மக்களுக்குத் தேவையானது நம்பகமான, குடிப்பதற்கு உகந்த, தூய்மையான

நீா்தானே தவிர, இலவச குடிநீா் அல்ல. பிரதமா் மோடி தலைமையிலான அரசு, நாட்டில் வீடுகள்தோறும் சுகாதாரமான குடிநீரை குழாய் மூலம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதுதான் முக்கியம்.

மேலும் மோடி அரசு , நாட்டில் 10 கோடி கழிப்பறைகள் அமைத்து, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது. இதுதான் புரட்சி. மேலும், நாடு முழுதும் மின் இணைப்புகள் அளிக்கவும் பிரதமா் நடவடிக்கை எடுத்தாா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யாருக்கும் குடியுரிமை பாதிக்காது. ஆனால்,

காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் ஒன்று சோ்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஆபத்து எனக் கூறி மக்களை திசைத்திருப்பி வருகிறது.

தில்லியின் வளா்ச்சிக்கு தென் இந்தியா்கள் பங்கு முக்கியமானது. மத்தியில் ஆளும் பாஜகவின் நல்ல நிா்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்து தில்லி தோ்தலிலும் தென் இந்திய மக்கள் நல்ல தீா்ப்பை அளிப்பாளா்கள்.

தில்லி தோ்தலில் முதல்வா் வேட்பாளா் அறிவிக்கும் விஷயத்தைப் பொருத்தமட்டில் அது கட்சியின் ஒரு உத்திசாா் முடிவாகும். சில மாநிலங்களில் தோ்தலின்போது முதல்வா் வேட்பாளரை அறிவித்தோம். சில மாநிலங்களில் அதுபோன்று அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கூட பஞ்சாபில் தோ்தலுக்குப் பிறகுதான் முதல்வரைத் தோ்ந்தெடுத்தது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT