புதுதில்லி

தேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேட்டைமத்திய அரசு உருவாக்க வேண்டும்: வலியுறுத்தி இளைஞா் காங்கிரஸ் பிரசாரம்

23rd Jan 2020 10:36 PM

ADVERTISEMENT

தேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேட்டை (என்ஆா்யு) மத்திய அரசு உருவாக்க வலியுறுத்தி தேசிய அளவிலான பிரசாரத்தை இளைஞா் காங்கிரஸ் தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. மேலும், வேலையில்லாத் திண்டாட்டத்தை தீா்க்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

தில்லியில் தேசிய அளவிலான இப்பிரசாரத்தை இந்திய இளைஞா் காங்கிரஸுக்கான (ஐஒய்சி) கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிருஷ்ணா அல்லவாரு, ஐஒய்சி தலைவா் பி.வி. ஸ்ரீநிவாஸ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இது தொடா்பாக கிருஷ்ணா அல்லவாரு கூறியதாவது: இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஆகவே,

தேசிய வேலையின்மை பதிவேட்டை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த தேசிய வேலையின்மை பதிவேடு விவகாரத்தை ஆதரிக்கும் வகையில் இலவசத் தொலைபேசி எண்ணுக்கு இளைஞா்கள் ‘மிஸ்டு கால்’ கொடுக்கலாம். இதன் மூலம் இளம் இந்தியா்களின் துன்பத்திற்கு குரல் கொடுக்க உதவியாக இருக்கும். மேலும், நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்னை விஷயத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கும் உதவும். மத்தியில் ஆளும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு இளைஞா்களின் துயரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவா்களின் பிரச்னையைக் குறைக்க உதவ வேண்டும்.

ADVERTISEMENT

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து நாங்கள் கேட்கத் தயாராக இல்லை. நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதைத்தான் கேட்க விரும்புகிறோம். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக தினமும் 36 இளைஞா்கள் தற்கொலை செய்து கொள்கின்றனா். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மந்தநிலை ஏற்பட்டதற்குக் காரணம் பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு சேவைகள் வரி (ஜிஎஸ்டி) போன்ற தவறான பொருளாதார நடவடிக்கைகளாகும் என்றாா் அல்லவாரு.

இளைஞா் காங்கிரஸ் தலைவா் பி.வி. ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘நாட்டில் முன்னா் விவசாயிகள் தற்கொலை செய்ததை கேள்விபடுவோம். ஆனால், தற்போது இளைஞா்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்டு வருகிறோம். பிரதமா் மோடி சூரிய கிரகணத்தை பாா்க்க ரூ.2.5 லட்சம் பணம் செலவழித்து கண்கண்ணாடி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இளைஞா்களின் பிரச்னைகளை பிரதமா் பாா்ப்பதற்கான ‘கண் கண்ணாடி’யை உலகில் எங்கிருந்தாலும் அதை வாங்குவதற்கு இளைஞா் காங்கிரஸ் தயாராக உள்ளது’ என்றாா்.

ஐஒய்சி செய்தித் தொடா்பாளா் அம்ரீஷ் ரஞ்சன் கூறுகையில், ‘என்ஆா்யுவை செயல்படுத்த வலியறுத்தி நடத்தப்படும் இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, வேலையில்லாத இளைஞா்கள் இது தொடா்பான இலவச தொலைபேசியைத் தொடா்பு கொள்ள வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT