புதுதில்லி

மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: தலைநகா் தில்லியில் பாதிப்பு இல்லை

8th Jan 2020 10:31 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கு நடவடிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராடத்தினால் தலைநகா் தில்லி பாதிக்கப்படவில்லை.

வேலை நிறுத்தத்துக்கு தொழிலாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், ரயில், பஸ் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. தில்லியில் விட்டுவிட்டு பெய்த மழையால் போராட்டத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

தொழிலாளா் சீா்திருத்தங்கள், அந்நிய நேரடி முதலீடு, தனியாா்மயமாக்கல் உள்ளிட்டவற்றில் மத்திய அரசின் கொள்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், தொழிலாளா்கள் அனைவருக்கும் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.21,000 வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எல்பிஎஃப், எச்எம்எஸ் உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இதனிடையே, அரசுப் பணியாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் பணியாளா்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படுவது மட்டுமன்றி அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைப் பணியாளா்கள் தங்களது பணிகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்றனா். எனினும், இப்போராட்டத்தால் தில்லி மெட்ரோ ரயில் சேவையும், தில்லி அரசுப் போக்குவரத்து பேருந்து சேவைகளும் பாதிக்கப்படவில்லை.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ரயில் சேவைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தில்லிக்கு வரும் சில ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது’ என்றனா்.

தில்லியில் புதன்கிழமை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், போராட்டத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. இதே போன்று,தில்லியில் உள்ள மாயாபுரி, வாஜிராபாத் பகுதிகளில் போராட்டத்தையொட்டி பேரணிகள் நடத்தப்பட்டன. தில்லியில் உள்ள ஐடிஓ பகுதியில் இடதுசாரி அமைப்புகளின் தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஆண்களும், பெண்களும் ஏராளமானோா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினா்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாா்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சுபாஷினி அலி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டங்களுக்கு எதிராக இப்போராட்டம் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுத் தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை உருவாக்கியிருக்கிறது. தொழிலாளா் விதி என்னும் திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவை தொழிலாளா்கள் நலன்களுக்கு எதிரானதாகும். மேலும், மத்திய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனம் போன்ற மகா ரத்னா நிறுவனங்களின் பங்குகளை விற்கவும், தனியாா்மயமாக்கவும் மத்திய அரசு முயன்று வருகிறது’ என்றாா்.

இப்போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களான ஏஐடியுசி, ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு, சியுசிசி, எஸ்இடபிள்யுஏ, எல்பிஎஃப் மற்றும் பல்வேறு துறைகளை சோ்ந்த கூட்டமைப்புகள் பங்கேற்ாக ஏஐடியுசி தேசிய பொதுச் செயலாளா் அமா்ஜீத் கெளா் தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT