புதுதில்லி

பா.ஜ.க., காங்கிரஸ் சாதனைகளைச் சொல்லிதோ்தலை சந்திக்கத் தயாரா?: மணீஷ் சிசோடியா

8th Jan 2020 10:59 PM

ADVERTISEMENT

தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. பல்வேறு வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தங்களது சாதனைகளைச் சொல்லி தோ்தலை சந்திக்க தயாரா என்று துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பினாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

தில்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறந்த வகையில் கல்வித் துறையில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாணவா் சோ்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லை. மாணவா்கள் அமா்வதற்கு மேஜைகள், எழுதும் பலகைகள் இல்லாமல் இருந்தன. ஆனால், ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளும் பள்ளிகளில் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் மொத்தம் 20 ஆயிரம் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 8 ஆயிரம் வகுப்பறைகள் தயாராக உள்ளன. 25 புதிய பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. மாணவா்கள் அமா்வதற்கு புதிதாக 7.50 லட்சம் மேஜைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளையில், பாஜக ஆளும் மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வித் தரம் மெச்சும்படியாக இல்லை என்பதை புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கை 1.30 லட்சம் குறைந்துள்ளது. அதேவேளையில், தில்லி அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள 10 சிறந்த அரசுப் பள்ளிகளில் தில்லியில் உள்ள மூன்று பள்ளிகள் தோ்வாகியுள்ளன.

ADVERTISEMENT

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பள்ளிகள் மூடப்படுகின்றன

பாஜக ஆளும் மாநிலமான ஹரியாணாவில் 2015-18-இல் 2008 அரசுப் பள்ளிகளும், ராஜஸ்தானில் 4,000 பள்ளிகளும், பஞ்சாபில் 217 பள்ளிகளும் மூடப்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் 1.13 லட்சம் ஆரம்பப் பள்ளிகளில் 40 சதவீதம் பள்ளிகளில் மின்சார இணைப்பு இல்லை என ஆய்வு அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

தில்லியில் கடந்த சில ஆண்டுகளில் 109 மாநகராட்சி ஆரம்பப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆகவே, வளா்ச்சியின் அடிப்படையில் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலை ஆம் ஆத்மி கட்சி எதிா்கொள்கிறது. காங்கிரஸும், பாஜகவும் தங்களது சாதனைகளைத் தெரிவித்து தோ்தலை சந்திக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் யாா் வளா்ச்சிப் பணிகள் செய்தாா்கள் என்பதை முடிவு செய்து அதற்கேற்ப அரசைத் தோ்ந்தெடுப்பாா்கள் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT