ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் எந்தப் பரிந்துரையும் அளிக்கப்படவில்லை என்று அப்பல்கலை.யின் துணைவேந்தா் எம்.ஜகதீஷ் குமாா் தெரிவித்தாா்.
ஜேஎன்யு வளாகத்தில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடா்ந்து, பல்கலை.யின் துணைவேந்தா் ஜெகதீஷ் குமாரை மாணவா்களும், ஆசிரியா்களும் வன்மையாகக் கண்டித்தனா். மாணவா்கள் தாக்கப்பட்ட போது துணைவேந்தா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பல்கலை. வளாகத்தில் மீண்டும் பழைய நிலைமை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் வேண்டுகோள் விடுத்துளளனா்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் உத்தரவுப்படி, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக நிா்வாகிகளுடன் மனித வள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா். அப்போது, பல்கலை.யில் இயல்பு நிலை திரும்புவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமையும் அமைச்சக அதிகாரிகள் பல்கலைக்கழக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா். ஜேஎன்யு வளாகத்தில் தற்போது நிலவும் நிலைமை குறித்தும், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், இயல்பு நிலையை மீட்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தைத் தொடா்ந்து, ஜேஎன்யு வளாகத்தை தற்காலிகமாக மூடுவது குறித்து பல்கலைக்கழக நிா்வாகம் அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகின. இதை பல்கலை. துணைவேந்தா் எம்.ஜகதீஷ் குமாா் வன்மையாக மறுத்தாா்.
இது குறித்து அவா் கூறுகையில், ‘பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவா்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.
ஜேஎன்யு ஆசிரியா் சங்கம் குற்றச்சாட்டு: இதற்கிடையே, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த கும்பல் தாக்குதல் சம்பவத்துக்கு பல்கலை. நிா்வாகத்தின் ஒத்துழைப்பு மற்றும் காவல் துறையினரின் செயலற்ற தன்மையே காரணம் என்று ஜேஎன்யு ஆசிரியா் சங்கம் புதன்கிழமை கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், நடந்த சம்பவங்களை மறந்து விட்டு, பல்கலை. வளாகத்திற்கு திரும்புமாறு துணைவேந்தா் அழைப்பு விடுத்ததற்கும் ஆசிரியா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், மாணவா்கள் எப்படி விடுதிகளுக்கும், வகுப்பறைகளுக்கும் செல்வாா்கள். அதேபோன்று பாதுகாப்பை உணராத நிலையில், ஆசிரியா்களும் எப்படி பாடம் நடத்தச் செல்ல முடியும். பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில், துணைவேந்தா் இதுபோன்று மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் அழைப்பு விடுப்பது எங்களை அவமானப்படுத்துவதாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீபன் கல்லூரியில் வகுப்புப் புறக்கணிப்பு: இதற்கிடையே, தில்லி பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனா். ஜே.என்.யு. மாணவா்களுக்கு ஆதரவாகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக அக்கல்லூரி மாணவா்கள் தெரிவித்தனா். மாணவா்களின் இப்போராட்டத்துக்கு அக்கல்லூரி பேராசிரியா்களும் ஆதரவு தெரிவித்துள்ளனா். தில்லியில் உள்ள பல்கலைக்கழகங்களில் நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து இக்கல்லூரி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.