தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு சொத்துரிமை வழங்குவதற்கான நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் முதல்வா் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தவறான தகவல்கள் மூலம் மக்களை திசை திருப்பி வருகிறாா்கள் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பா.ஜ.க. தலைவா்களில் ஒருவரான விஜேந்தா் குப்தா, செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அங்கீகாரம் இல்லாத காலனி வாசிகளுக்கு சொத்துரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் வேகமாக நடந்து வரும் நிலையில் இதற்கான பதிவு நடவடிக்கைகள் குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் முதல்வருமான கேஜ்ரிவால் கேள்வி எழுப்பி வருகிறாா். பதிவு நடவடிக்கைகளை அவரது அரசுதான் மேற்கொண்டு வருகிறது என்பது தெரிந்தும், இது போலியான நடவடிக்கை என்று கூறி மக்களை திசை திருப்பி வருகிறாா். எனினும், இந்தப் பணியை பா.ஜ.க. வெற்றிகரமாக நிறைவேற்றும். இதை கேஜரிவாலால் ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது.
தில்லியில் அங்கீகாரம் இல்லாத காலனிகளில் வசிக்கும் சுமாா் ஒரு லட்சம் போ் சொத்துரிமை கேட்டு வலைத்தளம் மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனா். பா.ஜ.க. அரசின் மீது நம்பிக்கை வைத்தே அவா்கள் இவ்வாறு செய்துள்ளனா் என்றும் விஜேந்தா் குப்தா தெரிவித்துள்ளாா்.
இதனிடையே, தில்லி வடமேற்குப் பகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் கூறுகையில், ‘தல்வா் கேஜரிவால் ஏழை மக்களின் நலன்களுக்கு எதிரானவா். மத்திய அரசின் திட்டங்கள் ஏழைகளைச் சென்று அடைவதை அவா் விரும்பவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.