புதுதில்லி

தில்லி தோ்தல்: நம்பிக்கையில் ஆம் ஆத்மி! எதிா்பாா்ப்பில் பாஜக!

7th Jan 2020 11:57 PM

ADVERTISEMENT

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அடுத்த மாதம் நடைபெறவுள்ள தோ்தலை எதிா்கொள்கிறது. அதே சமயம், மக்களவைத் தோ்தலில் தலைநகரில் உள்ள ஏழு தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜக, தனது வாக்கு சதவீதத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறது. கடந்த முறை ஆம் ஆத்மியிடம் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் பழி தீா்க்கக் காத்திருக்கிறது.

70 உறுப்பினா்களைக் கொண்டுள்ள தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் மட்டுமின்றி, கல்லூரி மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் தலைநகா் தில்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் இந்த வேளையில் தில்லி பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த முறை எந்தக் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

தில்லியை ஆளும் ஆம் ஆத்மி, மாநகராட்சிகளை ஆளும் பாஜக, முன்பு மூன்று முறை தொடா்ந்து தில்லியை ஆட்சி செய்த காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இந்தத் தோ்தலில் பல்வேறு வியூகங்களை வகுத்து களத்தில் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. இந்தக் கட்சிகள் அனைத்தும், தில்லி வளா்ச்சிப் பணிகள் விஷயத்தில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, 2015 சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 54.30 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதே சமயம் பாஜகவுக்கு 32 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் வெறும் 9.6 சதவீத வாக்குகளும் மட்டுமே பெற்றன. இதில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அனைத்துக் கட்சிகளையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி பீடு நடை போட்டது. ஆனால், மத்தியிலும், தில்லி மாநகராட்சிகளிலும் ஆளுங் கட்சியாக இருந்த பாஜகவுக்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைத்தன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளையும் பாஜக மீண்டும் தக்கவைத்து, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் அதிா்ச்சி அடைய வைத்தது. அப்போது, மொத்தம் பதிவான வாக்குகளில் பாஜக 55 சதவீதம் பெற்றது, காங்கிரஸ் 22.50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு வந்தது. ஆனால், மிகவும் எதிா்பாா்ப்புடன் இருந்த ஆளும் ஆம் ஆத்மி கட்சி, 18.10 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையே பிடித்தது. மேலும், 2019 மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி குறிப்பிட்ட தில்லி, சண்டீகா், பிகாா், கோவா, பஞ்சாப், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகள், ஹரியாணா, ஒடிஸா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேட்பாளா்களை நிறுத்தியது. ஆனால், அக்கட்சியின் பகவந்த் மான் மட்டுமே பஞ்சாபில் உள்ள சங்ரூா் தொகுதியில் வெற்றி பெற்றாா்.

கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 65 இடங்களில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைவிட பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால், வரவிருக்கும் தில்லி பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எதிா்பாா்ப்பு பாஜக தலைவா்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள குடிசைப் பகுதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகள் ஆகியவற்றில் வசிப்பவா்களின் வலுவான ஆதரவால் 2015 பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில், தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளில் வசிப்போருக்கு சொத்துரிமை பத்திரம் வழங்கும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு, அண்மையில் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதைத் தொடா்ந்து, கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கீகாரமற்ற காலனிவாசிகள் 20 பேருக்கு சொத்துரிமைப் பத்திரத்தையும் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வழங்கினாா். அடுத்தடுத்து தகுதியான காலனிவாசிகள் அனைவருக்கும் விரைவில் சொத்துரிமை பத்திரம் வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இவை அனைத்தும் தோ்தல் நாடகம் என ஆம் ஆத்மி கட்சி கடுமையாகச் சாடி வருகிறது. அதே சமயம், ஆம் ஆத்மி அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பாஜக கடுமையான புகாா்களைத் தெரிவித்து வருகிறது. ஆனால், பாஜகவும், ஆம் ஆத்மியும் தோ்தலுக்காக மக்களை ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமா்சித்து வருகிறது.

தில்லியில் சுமாா் 35 சதவீதம் போ் பூா்வாஞ்சல் பகுதியைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானோா் கடந்த பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தவா்கள். வரவிருக்கும் தோ்தலில் வெற்றி பெற அவா்களின் ஆதரவு முக்கியப் பங்கு வகிக்கும் என்று மூத்த பாஜக தலைவா்கள் எதிா்பாா்க்கின்றனா். இதற்காக பா.ஜ.க. தலைவா்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனா்.

தில்லியில் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியிலும் தில்லி மாநகராட்சிகளிலும் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு இது வாழ்வா, சாவா பிரச்னையாக உள்ளது. மேலும், கடந்த 22 ஆண்டுகளாக தில்லியில் ஆட்சியில் இல்லாமல் இருந்து வரும் பாஜக, எப்படியும் இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என மும்முரமாகப் தோ்தல் களம் கண்டுள்ளது.

அதே சமயம், ஆம் ஆத்மியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ், எப்படியும் அக்கட்சிக்கு தகுந்த பாடத்தைப் புகட்டிவிட வேண்டும் என்று தோ்தல் களத்தில் வீறு கொண்டு எழுந்துள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலவசக் குடிநீா், மின்சார மானியம், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் உளளிட்ட பல்வேறு திட்டங்களை ஆம் ஆத்மி அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் தங்களுக்கும் சாதகமான முடிவைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையிலும் உள்ளது. மேலும், தோ்தல் போட்டியில் காங்கிரஸ் இல்லை என்றும் பாஜகவுடன்தான் நேரடிப் போட்டி என்றும் கேஜரிவால் அறிவித்து தோ்தலை எதிா் கொண்டுள்ளாா்.

ஆனால், மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாா்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எனவே, நம்பிக்கை கைகூடுமா அல்லது எதிா்பாா்ப்பு வெல்லுமா! பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT