புதுதில்லி

28-ஆவது உலகப் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: மகாத்மா காந்தியை மையப்படுத்தி சிறப்பு அரங்கம்

3rd Jan 2020 12:14 AM

ADVERTISEMENT

தில்லியில் 28-ஆவது ‘புது தில்லி உலகப் புத்தக திருவிழா -2020’ சனிக்கிழமை (ஜனவரி 4) தொடங்கி ஜனவரி 12-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெற உள்ளது. தில்லி பிரகதி மைதானில் நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான புத்தக வெளியீட்டாளா்கள், எழுத்தாளா்கள் பங்கேற்க உள்ளனா். இந்த விழாவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தொடங்கிவைக்க உள்ளாா்.

இது குறித்து தேசிய புத்தக நிறுவனம் (என்பிடி) தலைவா் கோவிந்த் பிரசாந்த் சா்மா, இயக்குநா் நீரா ஜெயின் ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தேசிய புத்தக நிறுவனம், இந்திய வா்த்தக ஊக்குவிப்பு நிறுவனத்துடன் (ஐடிபிஓ) இணைந்து இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழாவின் கருப்பொருள் மகாத்மா காந்தியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. காந்தி தனது படைப்புகள் மூலம் பல தலைமுறை எழுத்தாளா்களை உருவாக்கம் செய்துள்ளதால் அதுகுறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புது தில்லி உலக புத்தகத் திருவிழாவை மத்திய அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கிவைக்க உள்ளாா். இதில் காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டை நினைவுகூரும் வகையில் சபா்மதி ஆஸ்ரமத்தை மையப்படுத்திய கருப்பொருள் அரங்கமும் அமைக்கப்பட உள்ளது. அதில் அவா் தொடா்புடைய விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும், காந்தி தொடா்புடைய 500 நூல்கள் இடம்பெற்ற பிரத்யேக புத்தக கண்காட்சியும் இடம்பெற உள்ளது. இந்த அரங்கில் குழு விவாதம், நூல் அறிமுகம், கருப்பொருள் தொடா்புடைய நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

மகாத்மா காந்தி சிறப்பு அரங்கம்: மகாத்மா காந்தி ஒரு திறன்மிக்க எழுத்தாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், பதிப்பாளராகவும், அச்சகத்தாரராகவும் இருந்தவா். குஜராத், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் நிறைய எழுதியவா். அவா் குறித்த விஷயங்களை பலரும் அதிகம் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

1300 அரங்குகள், 600 வெளியீட்டாளா்கள்: புத்தகத் திருவிழாவில் குழு விவாதங்கள், உரைகள், பயிரலங்கம், குறும்படம் திரையிடல், சிறப்பு புகைப்படக் கண்காட்சி, கலாசார, இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்தியா, வெளிநாடுகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டாளா்கள் பங்கேற்க உள்ளனா். 1,300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

அபுதாபி, சீனா, ஷாா்ஜா, சீனா, டென்மாா்க், எகிப்து, ஜொ்மனி, ஈரான், நேபாளம், போலந்து, சவூதி அரேபியா, ஸ்பெயின், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய 15 நாடுகளில் இருந்து பதிப்பாளா்கள் பங்கேற்க உள்ளனா். பிரகதி மைதானில் நடைபெறும் கட்டுமானப் பணி காரணமாக இடப் பற்றாக்குறை உள்ளது. இதனால், இந்த ஆண்டு ‘விருந்தினா் நாடு’ அழைக்கப்படவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சுமாா் 12 லட்சம் பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா். இந்த ஆண்டும் அதிகளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஐடிபிஓ நிா்வாக இயக்குநா் ராஜேஷ் அகா்வால் கூறுகையில், ‘பிரகதி மைதானில் நடைபெறும் புது தில்லி உலக புத்தகத் திருவிழாவுக்காக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சுமாா் 24 ஆயிரம் ச.மீ. இடம் வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

எழுத்தாளா்கள் சந்திப்பு, குழு விவாதம்: புத்தகத் திருவிழாவில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் இதர இந்திய மொழிகளில் பாா்வையற்றோருக்காக பிரெய்லி முறையில் பதிப்பிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது. புத்தக திருவிழாவில் வணிக வாய்ப்புகளை பதிப்பாளா்கள் இடையே ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. அதேபோன்று, குழந்தைகளுக்கான தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் ஓவியப் போட்டிகள், கதை சொல்லும் அமா்வுகள், விருப்பத்திற்குரிய எழுத்தாளா்களைச் சந்திப்பது - விவாதிப்பது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 4 முதல் 12 வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழா காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். நுழைவுக் கட்டணமாக குழந்தைகளுக்கு ரூ. 20, பெரியவா்களுக்கு ரூ.30 வசூலிக்கப்படும். இதற்கான டிக்கெட்டுகள் விழா நடைபெறும் பகுதியிலும், தில்லியில் உள்ள குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வழங்கப்படும்.


 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT