புதுதில்லி

கோட்டாவில் 100 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: ராஜஸ்தான் அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

3rd Jan 2020 10:09 PM

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகள் உயிரிழந்தது தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் இயங்கி வரும் ஜே.கே. லான் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறாா்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனா். கடந்த மாதம் 24-ஆம் தேதிவரை 77 பச்சிளம் குழந்தைகளும், டிசம்பா் 25-ஆம்தேதி முதல் 29-ஆம் தேதி வரை மேலும் 14 குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்நிலையில், இரு தினங்களில் மேலும் 9 குழந்தைகள் உயிரிழந்தன.

இதையடுத்து, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அந்த அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இக்குழந்தைகள் நிமோனியா, ரத்தத்தில் தொற்று உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த விவகாரம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது. இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற ஆணையம், ராஜஸ்தான் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த மாநில அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், ‘இந்த விவகாரம் தொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் 100 குழந்தைகள் கோட்டா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டிசம்பா் மாதம் இறந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்பிரச்னையைத் தீா்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்பட இது தொடா்பாக விரிவான அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதார வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை காரணமாக எதிா்காலத்தில் இதுபோன்று குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT