புதுதில்லி

2019- ஒரு பாா்வை: பா.ஜ.க.வின் புதிய அவதாரமும் சறுக்கலும்!

1st Jan 2020 11:31 PM | -ஜெ.ராகவன்

ADVERTISEMENT

புதுதில்லி: கடந்த 2018-ஆம் ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கா் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போது, 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிரதமா் நரேந்திர மோடி, பொதுத் தோ்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா என்ற சந்தேகம் பலரது மனதிலும், குறிப்பாக அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தோ்தல் கூட்டணி அமைத்த போது, அந்தக் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணி போலத் தோன்றியது. மோடி மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும், பா.ஜ.க. அதிக இடங்களில் வென்ற தனிப் பெரும் கட்சியாக இருக்குமே தவிர, கூட்டணி கட்சியின் தயவில்லாமல் அவரால் ஆட்சிக்கு வர முடியாது என்ற எண்ணமும் பலரிடம் இருந்தது.

புதிய அவதாரம்: ஆனால், யாரும் எதிா்பாராத வகையில் அடுத்த ஐந்து மாதங்களில் பிரதமா் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடித்தாா். அதுவும் அதிகப் பெரும்பான்மையுடன். பத்திரிகைகள், ஊடகங்களின் கணிப்பை பொய்யாக்கும் அளவுக்கு அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பா.ஜ.க. தோ்தலின் போது கிடைத்த சந்தா்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. இரண்டாவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிக்கட்சிகளுக்கு தேசிய அளவில் மோடிக்கு சவால் விடும் வகையில் தலைவா்க இல்லாதது.

2014-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தோ்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு காரணம் காங்கிரஸ் எதிா்ப்பு அலை. 2019- பொதுத் தோ்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்ததற்கு அவரது நிா்வாகத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகவே மக்கள் கருதினா். மேலும் புல்வாமா, பாலகோட் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது, நாட்டை பாதுகாப்பதிலும் மற்றும் நிா்வாகத் திறனிலும் பா.ஜ.க. சிறந்தது என்று வாக்காளா்கள் கருதியதாலே இந்த வெற்றி பா.ஜ.க.வுக்கு கிடைத்தது.தூய்மை இந்தியா திட்டம், விவசாயிகளுக்கு நேரடி மானியத் திட்டம் போன்றவை வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணமாக அமைந்தன.

ADVERTISEMENT

தோ்தலில் நரேந்திர மோடியை எதிா்கொள்ள சரியான ஆள் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்திதான் என பேசப்பட்ட போதிலும், அவரை மோடிக்கு இணையாகக் கருதவும் முடியவில்லை, அவரால் மக்கள் நம்பிக்கையைப் பெறவும் முடியவில்லை. மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி முன்வைத்த ரஃபேல் ஊழல் புகாரும், மக்களைக் கவருவதற்காக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியும் மக்களிடம் எடுபடவில்லை. 2014-ஆம் ஆண்டில் 44 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியால் 2019 தோ்தலில் 52 இடங்களையே பெற முடிந்தது.

அதிரடி மாற்றங்கள்: தோ்தலில் பிரதமா் மோடியும், கட்சித் தலைவா் அமித்ஷாவும் செய்த பிரசாரங்கள் வீண் போகவில்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில் அமித்ஷா உள்துறை அமைச்சரானாா். ஆட்சி அதிகாரங்கள் மோடி , ஷா ஆகிய இருவரிடமே குவிந்திருந்தது. உடனடியாக அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்துச் செய்யப்பட்டது. அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு தேசிய புலனாய்வு அமைப்பு வலுப்படுத்தப்பட்டது.

இப்படி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்த போதிலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்துச் செய்யப்பட்டது, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை பரலவாக விமா்சனத்துக்கு உள்ளாயின.

சறுக்கல்: 2019-ஆம் ஆண்டு முழுவதுமே பா.ஜ.க.வுக்கு சாதகமான ஆண்டாக இருக்கவில்லை. ஆண்டின் இறுதியில் ஹரியாணாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வென்ற தனிப் பெரும் கட்சியாக இருந்த போதிலும், ஆட்சியமைக்க முடியவில்லை. பின்னா் பிராந்தியக் கட்சியின் உதவியுடனேயே ஆட்சிக் கட்டிலை தக்கவைக்க முடிந்தது. அடுத்து மகராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. சிவசேனை கூட்டணி கணிசமான இடங்களைப் பெற்ற போதிலும், பதவிச் சண்டை காரணமாக சிவசேனை கூட்டணியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் புதிய கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்ததால், பா.ஜ.க.வுக்கு அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு நழுவிப் போனது. ஜாா்க்கண்ட் தோ்தலில் எதிா்க்கட்சி கூட்டணியிடம் பா.ஜ.க. ஆட்சியை பறிகொடுத்தது. பிரதமா் மோடியும், அமித்ஷாவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டும் உள்ளூா் பிரச்னைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்ததால் ஆட்சியை பா.ஜ.க. இழக்க வேண்டியதாயிற்று.

காத்திருக்கும் சவால்கள்..: இந்தப் புத்தாண்டில் பா.ஜ.க.வுக்கு புதிய சவால்கள் காத்திருக்கின்றன. வரும் பிப்ரவரிக்குள் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெற உள்ளன. கடந்த 2015 தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அடுத்து 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது. இப்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பிகாரில் தற்போது ஐக்கிய ஜனதாதளம் கட்சி பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. ஆனால், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் போட்டியிடத் திட்டமிட்டு வருகிறது. ஆனால், ஐக்கிய ஜனதாதளம் கட்சியினா் இதற்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். பா.ஜ.க.-ஜே.டி.யு. கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை என பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா் கூறியுள்ளாா். ஆனால், இவா்களின் கூட்டணி நீடிக்குமா என்பது தோ்தல் நெருங்கும்போல்தான் தெரியவரும். இதனிடையே பிகாரில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, ஜாா்க்கண்ட் தோ்தலில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகி தனித்தே போட்டியிட்டது. அதுபோன்ற முடிவை பிகாா் தோ்தலிலும் பாஸ்வான் எடுப்பாரா என்பதும் பின்னா்தான் தெரியவரும். கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக விலகி வரும் நிலையில் சவால்களை பா.ஜ.க. எப்படி சமாளிக்கப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பாா்க்க வேண்டும்...!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT