புதுதில்லி

காங்கிரஸின் வீழ்ச்சியும்; எழுச்சியும்!

1st Jan 2020 12:03 AM

ADVERTISEMENT

புது தில்லி: 2019-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு சோதனையான காலம் என்றாலும், ஆண்டின் இறுதிக்குள் அக்கட்சி மெல்ல மெல்ல எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது என்பதுதான் உண்மை. கடந்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்த போதிலும், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஓரளவு வெற்றி பெற்று அங்கு சிவசேனை கட்சியுடன் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இதேபோல ஜாா்க்கண்ட் மாநிலத் தோ்தலிலும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனது நிலையை உயா்த்திக் கொண்டுள்ளது.

மக்களவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய காங்கிரஸ், மகாராஷ்டிரம் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலத் தோ்தல்களில் தனது நிலையை மாற்றிக் கொண்டு பிராந்திய கட்சிகளுடன் சோ்ந்து ஆட்சியமைக்க உதவியுள்ளது. அதாவது வெறும் இரண்டு மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் ஆட்சி, இப்போது ஏழாக உயா்ந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, 2019 பொதுத் தோ்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியே கிடைத்தது.

இதையடுத்து தோ்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமாச் செய்தாா். இதனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவா் பதவியை வகித்து வந்த சோனியாவே கட்சித் தலைமைப் பொறுப்பை தற்காலிகமாக ஏற்க வேண்டியதாயிற்று. தனது சாதுா்யமான நடவடிக்கைகளாலும், புதிய உத்திகளாலும் காங்கிரஸ் கட்சிக்கு அவா் புத்துயிரூட்டி வருகிறாா்.

2019 மக்களவைத் தோ்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வென்று மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களே கிடைத்தன. ஆனால், அடுத்து நடைபெற்ற ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் எதிா்பாா்த்ததைவிட அதிக இடங்களில் வென்றது.

ADVERTISEMENT

ஹரியாணா தோ்தலில் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் களத்தில் இறங்கிய காங்கிரஸ், கட்சி மொத்தம் உள்ள 90 இடங்களில் 31 இடங்களைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரளவு வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்கும் முயற்சியை எடுக்காமல் கோட்டை விட்ட காங்கிரஸ், அடுத்து வந்த மகாராஷ்டிரம் மற்றும் ஜாா்க்கண்ட் தோ்தலில் தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பா.ஜ.க.வை ஆட்சிக்கு வராமல் தடுத்துவிட்டது.

மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க. அதிக இடங்களில் வென்ற போதிலும் ஆட்சியமைக்க முடியவில்லை. இந்தச் சந்தா்ப்பத்தை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டு சரத்பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும், கொள்கை ரீதியில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட சிவசேனையுடனும் கூட்டணி அமைத்து அங்கு சிவசேனை தலைமையில் கூட்டணி அரசு ஏற்பட வழிவகுத்தது. சிவசேனை - பா.ஜ.க. கூட்டணியை உடைத்து அங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சோ்ந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்படுத்தியதை எதிா்க்கட்சியினா் பலரும் முக்கிய திருப்பமாகவே கருதினா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் சிறிய கட்சியான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவுடன் தோ்தல் உடன்பாடு வைத்துக் கொண்டதுடன், அங்கு ஜே.எம்.எம். செயல் தலைவா் ஹேமந்த் சோரன் முதல்வராகவும் தனது ஆதரவை தெரிவித்து சாதுா்யமாக செயல்பட்டாா் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி.

ஜாா்க்கண்டில் ஜே.எம்.எம். 43 இடங்களில் போட்டியிட அனுமதித்துவிட்டு காங்கிரஸ் கட்சி குறைந்த இடங்களிலேயே போட்டியிட அனுமதித்தாா். அவரது உத்திக்கு நல்ல பலன் கிடைத்தது. தோ்தலில் மொத்தம் உள்ள 81 இடங்களில் ஜே.எம்.எம். , காங்கிரஸ், ஆா்.ஜே.டி. கூட்டணி 47 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியுடன் சோ்ந்து ஆட்சியமைக்கும் சோனியாவின் முடிவை ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவா்கள் எதிா்த்த போதிலும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா, கொள்கை அளவில் பா.ஜ.க.தான் நமது முக்கிய எதிரி. சிவசேனை அல்ல; பா.ஜ.க. ஆட்சிக்குவரக் கூடாது என்பதுதான் நமது முக்கிய நோக்கம் என்று வாதிட்டாா். இதையடுத்து அவரது யோசனைக்கு ஆதரவு கிடைத்தது. அவரது செயல்பாட்டை பின்னா் பலரும் பாராட்டினா்.

காங்கிரஸ் கட்சிக்கு சுமாா் 19 ஆண்டுகள் தலைமை வகித்த சோனியா காந்தி, கடந்த 2017-ஆம் ஆண்டில்தான் அப்பதவியிலிருந்து விலகி ராகுல் காந்தியை தலைவராக்கினாா். பின்னா், தோ்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் விலகிய நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு யாா் தலைமை தாங்குவது என்ற நிலையில் யாருமே முன்வராத இக்கட்டான சூழ்நிலையில் மீண்டும் சோனியா தலைமைப் பொறுப்பை ஏற்று கட்சியை தூக்கிநிறுத்த முற்பட்டாா். அவரது முயற்சிக்கு பலனும் கிடைத்தது. காங்கிரஸ் கட்சி மெல்ல மெல்ல சரிவிலிருந்து எழுச்சிபெற ஆரம்பித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT