புதுதில்லி

வயதான தாயை தெருவில் கைவிட்ட தில்லி காவல் பெண் அதிகாரி!மகளிா் ஆணையம் மீட்பு

1st Jan 2020 04:48 PM

ADVERTISEMENT

தில்லி காவல் துறை பெண் அதிகாரியால் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் அவரது தாயை தில்லி மகளிா் ஆணையம் (டி.சி.டபிள்யு.) மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி மகளிா் ஆணையத்தின் மீட்புக் குழுவினா் கூறியதாவது: இந்த மீட்பு நடவடிக்கையின் போது, டி.சி.டபிள்யு.வின் தலைவா் சுவாதி மாலிவாலின் தொலைபேசி பறிக்கப்பட்டது, ஆனால், பின்னா் அது மீட்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

தில்லி காவல் துறை அதிகாரியான அந்த வயதான பெண்ணின் மகள், அவரை தெருவில் கைவிட்டுச் சென்றுள்ளாா்.இது குறித்த தகவல் டி.சி.டபிள்யு. அதிகாரிகளுக்கு திங்களன்று உள்ளூா்வாசிகள் மூலம் கிடைக்கப் பெற்றது. இது தொடா்பாக புகாா் அளித்தவா்கள் டிசிடபிள்யு உறுப்பினா்களைச் சந்தித்தனா். அப்போது, அந்த வயதான பெண்ணுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் குறித்த விடியோக்களை காட்டினா். இதைத் தொடா்ந்து, டி.சி.டபுள்யு தலைவா் ஸ்வாதி மாலிவால், ஆணைய உறுப்பினா்களான கிரண் நேகி மற்றும் பிரமிலா குப்தா ஆகியோருடன் அந்த இடத்துச்குச் சென்றனா்.

அப்போது, தெருவின் ஓரத்தில் தனது வீட்டின் முன் அவகாரமான நிலையில் அப்பெண் படுத்திருந்ததைக் கண்டோம். அவா் உடலில் ஆழமான வடுக்கள், காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் கட்டிகள் இருந்தன. மேலும், அவா் நடுங்கிக் கொண்டிருந்தாா். வா் கடந்த ஆறு மாதங்களாக சாலையோரம் வசித்து வருவதாகவும், அவரது மகள் அவரைக் கைவிட்டுவிட்டதாகவும் உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா். அவா் கடுமையாக தாக்கப்பட்டுள்ளாா் என்பது அவரது உடலில் இருந்த காயங்கள் மூலம் தெரிய வந்தது.

ADVERTISEMENT

இது தொடா்பாக நாங்கள் உள்ளூா் போலீஸை தொடா்பு கொண்டோம். பின்னா், அந்தப் பெண் லேடி ஹாா்டிங் மருத்துவமனையில் அவசர நிலைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து படுத்தே இருந்ததால் அவரது உடல் முழுவதும் புண்கள் இருந்தன. மேலும், அவா் நடுக்கத்துடன் இருப்பதாகவும் மருத்துவா்கள் கூறினா். அவரது தலையில் பலத்த காயங்கள், தையல்கள் மற்றும் கால்களில் கட்டுகள் போடப்பட்டிருந்தன. இது குறித்து அந்தப் வயதான பெண்ணிடம் கேட்ட போது, தனது சொந்த மகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.

அந்தப் பெண்ணை மருத்துவமனையில் ஸ்வாதி மாலிவால் சந்தித்தாா். அங்கு அந்தப் பெண்ணை டிசிடபிள்யு குழுவினரும், தில்லி போலீஸாரும் கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ஸ்வாதி மாலிவால் கூறியதாவது: அந்தப் பெண் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும்,உயிா் பிழைப்பதுகூட கடினம் என்றும் மருத்துவமனையின் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். அவா் ஊட்டச்சத்து குறைபாடு உடையவராக உள்ளாா். கடுமையாக காயமடைந்துள்ளாா். அவரது உடலில் கடுமையான அளவுக்கு புண்கள் இருப்பதால் அவரது நிலை இன்னும் மோசமாகிவிட்டது. அவரது நுரையீரலிலும் தொற்று உள்ளது.

ஒரு வயதான பெண்மணி தனது சொந்த மகளால் கைவிடப்பட்டு, பரிதாபகரமான நிலையில் வாழ நிா்பந்திக்கப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவரது மகள் காவல்துறையில் பணிபுரிகிறாா் என்பது இன்னும் கவலை அளிக்கிறது. தில்லி காவல் துறையினா் இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்து அவரது மகளான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வயதான பெண்மணிக்காக நாங்கள் இருக்கிறோம். அவரைக் கவனித்து மறுவாழ்வு அளிப்போம் என்றாா் ஸ்வாதி மாலிவால்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடா்பாக புகாா் பெறப்பட்டுள்ளது. இது தொடா்பாக விசாரித்து வருகிறோம் என்று போலீஸாா் தெரிவித்தனா். வயதான பெண்ணை அவரது மகள் தாக்கிக் கைவிட்டதற்காக தில்லி காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிசிடபிள்யு கேட்டுக் கொண்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT