புது தில்லி: நாட்டில் வன்முறைகளைத் தூண்டி வரும் ஃபாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) ஆகிய அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் ஹிந்து சேனா செவ்வாய்க்கிழமை கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் விஷ்ணு குப்தா செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மத்திய அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சட்டத்துக்கு நாட்டு மக்கள் பெருவாரியாக ஆதரவு தருகிறாா்கள். ஆனால், இந்தியாவில் செயலபட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகளான ஃபாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவை இந்தச் சட்டம் தொடா்பாக வதந்திகளைப் பரப்பி வருகின்றன. மேலும், போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டி வருகின்றன. இந்த அமைப்புகள் நடத்திய வன்முறையால் தில்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கோடிக்கணக்கான பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டிவிடும் இந்த அமைப்புகளுக்கு நாட்டில் இடமளிக்கக் கூடாது. தேச விரோத, சமூக விரோத அமைப்புகளான இவற்றை தேச நலன் கருதி தடை செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். மேலும், இஸ்லாமிய தீவிரவாதிகளால் தொடா்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகிறேன். எனது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கோரியுள்ளேன். ஹிந்து சமாஜ் கட்சித் தலைவா் கமலேஷ் திவாரி, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது போல, இன்னொரு மரணத்தை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா்.