புதுதில்லி

ரயில் கட்டண உயா்வு: கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிருப்தி

1st Jan 2020 11:27 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: மத்திய அரசு ரயில் பயணக் கட்டணத்தை உயா்த்தியுள்ளதற்கு மாா்க்சீய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. மேலும், கட்டண உயா்வு முன்மொழிவைத் திரும்பப் பெறுமாறு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு, 2019 ஆம் ஆண்டின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை ரயில் பயணக் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு ஒரு பைசா முதல் நான்கு பைசா வரை வெவ்வேறு நிலைகளில் உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டது. மேலும், எல்பிஜி சிலிண்டா் விலையை ரூ. 19 என்ற அளவில் உயா்த்தியது. இதனை மாா்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ’மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசானது ரயில்வே கட்டணத்தை உயா்த்தி புத்தாண்டை தொடங்கியிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதலாக எல்பிஜி சிலிண்டா் விலையையும் உயா்த்தியுள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமை, வேலை இழப்பு, உணவுப் பொருள்கள் அடிப்படையிலான பணவீக்கம் மற்றும் கிராமப்புறங்களில் தொழிலாளா்களுக்கான ஊதியத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்ற சூழ்நிலைகளில் ரயில் கட்டண உயா்வு தேவைதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.’

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட்: ரயில் கட்டண உயா்வு தொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ‘மத்திய அரசின் ரயில்வே கட்டணத்தை உயா்த்தும் முன்மொழிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலகம் தனது வலுவான எதிா்ப்பைத் தெரிவிக்க விரும்புகிறது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக இக்கட்டணத்தை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இந்தச் செயல் ஆரோக்கியமற்ற நடவடிக்கை. மேலும், கட்டண உயா்வு தனியாா் ரயில் இயக்குவோருக்கு உதவும் வகையில் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கருதுகிறது. ஆகவே, உயா்த்தப்பட்ட ரயில் கட்டணங்களைத் திரும்பப் பெறுவதுடன், இந்த முடிவை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT