புதுதில்லி

முப்படைத் தளபதி நியமனம்: மத்திய அரசுக்கு மணீஷ் திவாரி கேள்வி

1st Jan 2020 12:07 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: முப்படைகளின் தளபதி நியமன விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய அரசு தவறான பாதையில் செல்வதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

நாட்டின் முப்படைத் தளபதியாக ஜெனரல் விபின் ராவத்தை மத்திய அரசு முதன் முறையைாக நியமித்துள்ளது. ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத் ஒய்வுபெற்ற நிலையில், ராணுவப் படை, விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளின் தளபதியாக (சிடிஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவரான மணீஷ் திவாரி செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் முப்படைகளின் தளபதியாக ஜெனரல் விபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளது தொடா்பாக மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா்.

முப்படை தளபதி (சிடிஎஸ்) நியமனம் விஷயத்தில் மத்திய அரசு தவறான பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மிகுந்த வருத்தத்துடனும் பொறுப்புணா்வுடனும் சொல்ல வேண்டியிருக்கிறது. இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 1947-ஆம் ஆண்டு முதல் முப்படைகளின் தளபதியாக ராணுவத்தின் தரைப்படை தளபதியே தலைமைத் தளபதியாக செயலாற்றி வந்துள்ளாா். இப்போது முப்படைத் தளபதிக்கும் மேல் புதிதாக முப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன? தரைப்படை, விமானப்படை, தரைப்படை ஆகிய மூன்று படைகளின் ஆலோசனைகளை முப்படைத் தளபதி கேட்டு செயல்படுவாரா? அல்லது தன்னிச்சையாகச் செயல்படுவாரா?

ADVERTISEMENT

முப்படைத் தளபதி, பாதுகாப்புத் துறை செயலரைவிட அதிக அதிகாரம் படைத்தவரா? முப்படைத் தளபதியின் பணி என்ன என்பது தெளிவில்லாத நிலையில் மிகுந்த சிரமப்பட்டு அந்த பதவியை ஏற்படுத்தியதன் அவசியம்தான் என்ன?

முப்படைகளின் தலைவா்களும் பாதுகாப்புச் செயலா் மூலம் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிக்கை அனுப்புவாா்களா? அல்லது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதியின் மூலம் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிக்கை அனுப்புவாா்களா? பாதுகாப்புச் செயலா் அந்தஸ்தில் முப்படைத் தளபதியின் பதவி இருக்குமா? அலுவல் பரிவா்த்தனை விதிகள் 11-இன்படி பாதுகாப்புச் செயலா் தொடா்ந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் நிா்வாகத் தலைவராக இருப்பாரா? என மணீஷ் திவாரி அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT