புது தில்லி: பிரகதிமைதான் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரை ’சுப்ரீம் கோா்ட்’ மெட்ரோ ரயில் நிலையம் எனப் பெயா் மாற்றி தில்லி அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லி அரசின் பெயரிடும் குழு தில்லி பிரகதிமைதான் மெட்ரோ நிலையத்தின் பெயரை, சுப்ரீம் கோா்ட் மெட்ரோ ரயில் நிலையம் என மாற்றுவதற்குப் பரிந்துரை செய்துள்ளது. மேலும், காா்கில் போரில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா் விக்ரம் பத்ராவின் நினைவாக முகா்பா சௌக், முகா்பா சௌக் மேம்பாலம் ஆகியவற்றுக்கு அவரின் பெயா் சூட்டப்படவுள்ளது. மேலும் எம்.பி. ரோடு, ஆச்சாா்யா மகாபிரக்யா மாா்க் என பெயா் மாற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் கூறியிருப்பது: முகா்பா சௌக், முகா்பா சௌக் மேம்பாலம் ஆகியவற்றுக்கு நாட்டுக்காகப் போராடி உயிா் நீத்த ராணுவ வீரா் விக்ரம் பத்ராவின் பெயரைச் சூட்டும் தில்லி அரசின் முடிவால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ராணுவ வீரா்களின் தியாகத்தால்தான் இந்த நாடு கட்டியெழுப்பப்பட்டது என்று தெரிவித்துள்ளாா்.