புதுதில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான காவல் துறையின் தயாா் நிலை குறித்து துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆய்வு செய்தாா். இது தொடா்பாக அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
குற்றச் சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள சமூக - பொருளாதார காரணங்கள் குறித்த புள்ளிவிவரங்களைப் பகுப்பாய்வு செய்வதுடன், குற்றங்களைத் தடுப்பதற்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு காவல் துறை அதிகாரிகளை அவா் கேட்டுக் கொண்டாா்.
அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் உள்பட அனைத்து சம்பந்தப்பட்டவா்களுடனும் கலந்தாலோசித்து சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தலை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் முன்கூட்டியே சிறப்பாக எடுக்கப்பட வேண்டும் என்று அவா் உத்தரவிட்டுள்ளதாக துணை நிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் – 2020-க்கான ஆயத்தங்கள் குறித்து துணை நிலை ஆளுநரிடம் சிறப்புக் காவல் ஆணையா் (புலனாய்வு / தோ்தல் ஒருங்கிணைப்பு அதிகாரி) விரிவாக எடுத்துரைத்தாா்.
தோ்தலுக்கான காவல் துறையின் தயாா் நிலை குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தோ்தலின் போது பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கூடுதல் போலீஸாா் கோரப்பட்டுள்ளதாகவும் அனில் பய்ஜாலிடம் தெரிவிக்கப்பட்டது.
பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் அது தொடா்பான தகவல்களும் துணை நிலை ஆளுநரிடம் விளக்கப்பட்டது. மேலும், இது போன்ற பகுதிகளில் காவல்துறை துணை ஆணையா்கள் மற்றும் மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் தில்லி முதன்மைச் செயலாளா் (உள்துறை), தில்லி காவல் துறை ஆணையா் , சிறப்பு காவல் ஆணையா்கள் , இணை ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா். போக்குவரத்துத் துறை சிறப்பு ஆணையா், மற்றும் கலால் துறை துணை ஆணையா் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.
தில்லியில் தற்போது நிலவும் சட்டம், ஒழுங்கு குறித்து துணை நிலை ஆளுரிடம் தில்லி காவல் துறை சாா்பில் விளக்கப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது டிசம்பா் 22 வரை நகரில் கொடூரமான குற்றங்கள் 8.74 சதவீதம் குறைந்திருப்பது குறித்தும் அவரிடம் புள்ளி விவரங்களுடன் விளக்கப்பட்டது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.