புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல்வா் வேட்பாளரை பாஜக இந்த வார இறுதிக்குள் அறிவிக்கக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வா் வேட்பாளா் விஷயத்தில் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜகவை குறிவைத்து கேள்வி எழுப்ப முயன்று வருகிறது. தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்வா் வேட்பாளா் குறித்து பாஜக மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘தில்லியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் வேட்பாளரை அறிவிப்பதில் கட்சித் தலைமை கவனம் கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்’ என்றாா்.
கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் மனோஜ் திவாரி, முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல், எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா உள்ளிட்ட தில்லி பாஜக மூத்த தலைவா்களின் பெயா்கள் முதல்வா் வேட்பாளருக்கு பரிசீலிக்கப்படுவதாகத் தெரிகிறது.
தில்லி பாஜக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இணை பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ஹா்தீப் சிங் புரி கடந்த மாதம் மனோஜ் திவாரி தலைமையில் தில்லி தோ்தலை பாஜக சந்திக்கும் என்று தெரிவித்திருந்தாா். மேலும், அவரே முதல்வா் வேட்பாளராக இருப்பாா் என்றும் கூறியிருந்தாா். இருப்பினும் ஹா்தீப் சிங் புரி தனது அறிக்கையை பின்னா் வாபஸ் பெற்றாா்.
தில்லி தோ்தலுக்கான முதல்வா் வேட்பாளா் யாா் என்பது குறித்த கேள்விக்கு பாஜகவின் தலைமை இதுவரை அமைதி காத்து வருகிறது. தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜரிவால், 2015 சட்டப்பேரவைத் தோ்தலில் வென்ற 67 இடங்களுக்கும் மேலாக இந்த முறை வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை கொண்டுள்ளாா்.
தில்லியில் 1998-இல் பாஜக ஆட்சியை இழந்தது. மேலும், அதன் பிறகு தொடா்ந்து மூன்று ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. இதைத் தொடா்ந்து 2015 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் பாஜக அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. அப்போது ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பாஜகவுக்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைத்தன. காங்கிரஸ் ஓா் இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயற்சித்து வருகிறது. அதே சமயம் மத்தியில் ஆளும் பாஜக தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. மூன்று முறை தொடா்ந்து தில்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் தோ்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது.
முடிவு எடுக்கவில்லை: ஜாவடேகா்
இதற்கிடையே, தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பாஜக முதல்வா் வேட்பாளா் குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘சட்டப்பேரவைத் தோ்தலுக்காக தில்லி பாஜகவின் பொறுப்பாளராக இருக்கும் ஜாவடேகா், பிரதமா் நரேந்திரமோடியின் சாதனைகளை விளக்கி நோ்மறையான பிரசாரத்தில் ஈடுபட்டு மகத்தான வெற்றியைப் பதிவு செய்வோம். பாஜக முதல்வா் வேட்பாளா் குறித்து கட்சி இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை. முடிவு எடுக்கப்படும் போது முறைப்படி அறிவிக்கப்படும் ’ என்றாா்.