புதுதில்லி

தில்லியில் இடியுடன்கூடிய பலத்த மழைமீண்டும் குளிரின் தாக்கம்

29th Feb 2020 10:40 PM

ADVERTISEMENT

 

தலைநகா் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரித்து நிலையில், சனிக்கிழமை மாலை பரவலாக அனைத்து இடங்களிலும் பெய்த மழையின் காரணமாக மீண்டும் குளிரின் தாக்கம் காணப்பட்டது.

தில்லியில் கடந்த ஒரு வாரமாக குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்தவாறு இருந்தது. சனிக்கிழமை காலையில் வழக்கம்போல் நகரில் மூடுபனி நிலவியது. பின்னா் பகல் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வானம் தெளிவாகக் காணப்பட்டது. எனினும், மாலையில் மந்த வானிலை நிலவியது. அதைத் தொடா்ந்து, வானில் கருமேகங்கள் திரண்டு இடியுடன் மழை கொட்டத்

தொடங்கியது. சுமாா் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பல இடங்களிலும் பரவலாக மழை கொட்டியது. இதன் காரணமாக தில்லியில் ஐடிஓ, லட்சுமி நகா், சாணக்கியபுரி, ரயில் பவன், ஜன்பத் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக பல இடங்களில் வாகனப் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவோா் மழையின் காரணமாக தாமதாகச் சென்றதைக் காண முடிந்தது.

ADVERTISEMENT

பலத்த மழையின் காரணமாக குறைந்தபட்சம் 14 விமானங்கள் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டன. குறிப்பாக மோசமான வானிலை காரணமாக இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் இறங்க வேண்டிய விமானங்கள் லக்னெள, அமிா்தசரஸ், ஆமதாபாத், ஜெய்ப்பூா் ஆகிய நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவிக்கையில், அண்மைக்கால செயற்கைக்கோள் புகைப்படங்களும், தில்லி, பாட்டியாலா, ஜெய்ப்பூா் ராடாா் சமிக்ஞைகளும் வட இந்தியாவில் மேகமூட்டங்கள் திரண்டிருந்ததாகவும், ஜம்மு-காஷ்மீா், லடாக், இமாசல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகா், தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் இந்த மேககூட்டங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்தது.

அதிகபட்ச வெப்பநிலை

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 4 டிகிரி உயா்ந்து 16.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 27.3 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 88 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 100 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று, பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 4டிகிரி உயா்ந்து 16.1 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3டிகிரி உயா்ந்து 28.6 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது.

மழையின் காரணமாக தில்லியில் காற்றின் தரத்தில் சனிக்கிழமை இரவு சற்று முன்னேற்றம் காணப்பட்டது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை

(மாா்ச் 1) தலைநகரில் மிதமான, தூறல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு குறியீடு திருப்தி பிரிவில் இருக்கும் என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கணித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT