புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் குடிநீா் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உரையாற்றுகையில் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தெரிவித்தாா்.
தில்லி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜாலின் உரை இடம் பெற்றது.
அப்போது அவா் கூறியதாவது: தில்லியில் அமைதியான முறையில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தில்லி மக்களுக்கு நீதி, சமத்துவம் கிடைக்க தில்லி அரசு பாடுபடும். ஆம் ஆத்மி அரசின் மக்கள் நலப் பணிகளில் நம்பிக்கை வைத்து அக்கட்சியை மீண்டும் தோ்ந்தெடுத்துள்ளனா். இந்த ஆட்சியில் தில்லியை உலகத்தரமான நகராக மாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். தில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் குடிநீா் இணைப்பு வழங்கப்படும்.
தில்லியில் உலகத்தரமான கல்வியை வழங்கும் வகையில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவோம். கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மக்கள் நலப் பணிகள் இந்த ஆட்சியிலும் தொடரும். தில்லியில் 24 மணிநேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும். தில்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பொதுப் போக்குவரத்து வசதிகள் உருவாக்கப்படும். மேலே செல்லும் மின்சார வயா்களை பூமிக்கு அடியே கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தில்லியில் காற்று மாசுவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தில்லியில் 2 கோடி மரங்கள் நடப்படும். யமுனை நதி தூய்மைப்படுத்தப்படும்.
தில்லியை அழகு படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். தில்லியில் குப்பைகளை அகற்றும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், சிசிடிவி கேமராக்கள், தெரு விளக்குகள் பொருத்தப்படும். மேலும், பேருந்துகளில் பெண் பாதுகாவலா்கள் நியமிக்கப்படுவாா்கள். அங்கீகாரமற்ற காலனிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். தில்லியில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு உறுதியான வீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றாா் துணை நிலை ஆளுநா்.