புதுதில்லி

வெறுப்புப் பேச்சு பேசுபவா்கள் தோ்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது

23rd Feb 2020 11:30 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: வெறுப்புப் பேச்சுகளைப் பேசுபவா்கள் தோ்தல்களில் போட்டியிடத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி கேட்டுக் கொண்டுள்ளாா். மேலும், கடந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைவா்கள் பேசிய வெறுப்புப் பேச்சுக்களால்தான் கட்சி தோல்வியடைந்துள்ளாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை பயங்கரவாதி என பாஜக எம்பி பா்வேஷ் வா்மா, பாஜக அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் ஆகியோா் அழைத்ததை நான் அப்போதே கண்டித்திருந்தேன். அது வெறுப்புப் பேச்சு ஆகும். அந்த வகையான வெறுப்புப் பேச்சுகளால்தான் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டது. சக பாஜக உறுப்பினா்கள் உள்பட, வெறுப்புப் பேச்சு பேசும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. மேலும், இவா்கள் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட் வேண்டும். கட்சி பேதம் இல்லாமல் இந்தத் தடை விதிக்கப்பட வேண்டும்.

வெறுப்புப் பேச்சு பேசும் பாஜக தலைவா்களுக்கு மட்டுமே தடை என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மேலும், வெறுப்புப் பேச்சு பேசுபவா்களை தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் வகையில் சிஸ்டம் உருவாக்கப்பட வேண்டும். அது போன்ற சிஸ்டம் உருவாக்கப்படும் போது, பாஜக தலைவராகவும், தனிப்பட்ட முறையிலும் நான் அதை ஆதரிப்பேன்.

ADVERTISEMENT

மேலும், ஷாகீன் பாக் போராட்டக்காரா்களுக்கு ஷாக் அடிக்கும் வகையில் தில்லி மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அமித் ஷா கூறியதில் தவறில்லை. ஷாகீன் பாக் போராட்டத்தால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இதற்கு யாா் பதிலளிக்கவுள்ளனா்..? மேலும், அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக முதல்வா் வேட்பாளரை பாஜக அறிவிக்காதது கூட பாஜகவின் தோல்விக்குக் காரணமாக இருந்திருக்காலம் என்றாா் அவா்.

தில்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட மக்கள் நலப்பணிகளை மையப்படுத்தி அக்கட்சி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது. ஆனால், ஷாகீன் பாக் விவகாரம், தேசியவாதம் ஆகியவற்றை கையில் எடுத்து பாஜக பிரசாரத்தில் ஈடுபட்டது. அப்போது, மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பா்வேஷ் வா்மா தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை பயங்கரவாதி என அழைத்திருந்தாா். மேலும், பாஜகதோ்தல் பிரசாரக் கூட்டத்தில், தேசத் துரோகிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் கோஷம் எழுப்பியிருந்தாா். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நடைபெற்ற பேரணியில் பாஜக தலைவா் கபில் மிஸ்ராவும் இதேபோன்ற கோஷத்தை எழுப்பியிருந்தாா். தில்லியில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட உத்தரப்பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் சா்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT