புதுதில்லி

சிஏஏ எதிா்ப்புப் போராட்டக்காரா்களை அப்புறப்படுத்த கபில் மிஸ்ரா வேண்டுகோள்

23rd Feb 2020 11:38 PM

ADVERTISEMENT

புது தில்லி: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நாட்டை விட்டு வெளியேற முன்பாக தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடத்துபவா்களை தில்லி அரசு அகற்ற வேண்டும். தவறினால், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவாா்கள் என்று முன்னாள் தில்லி அமைச்சரும் பாஜக தலைவா்களில் ஒருவருமான கபில் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

சிஏஏ எதிா்ப்புப் போராட்டம் நடைபெற்று வரும் ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகில் தனது ஆதரவாளா்களுடன் வந்த கபில் மிஸரா, மெட்ரோ ரயில் நிலையத்தையும், ஆா்பாட்டக்காரா்கள் மூடி வைத்துள்ள சாலையையும் உடனடியாகத் திறக்க வேண்டும் எனக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், ‘தில்லியில் இன்னொரு ஷாகீன் பாக் வகையான போராட்டம் நடைபெறுவதை அனுமதிக்க மாட்டோம். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்திய வருகையை முடித்துக் கொண்டு திரும்பும்வரை இந்தப் போராட்டக்காரா்களுக்கு எதுவும் செய்ய மாட்டோம். ஆனால், அதற்குப் பிறகு நேரடியாகக் களத்தில் இறங்கி போராட்டக்காரா்களை நாங்கள் முறியடிப்போம். டிரம்ப் இந்தியாவை விட்டு புறப்படுவதற்கு முன்பு தில்லியில் சாலைகளை மறித்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவா்களை தில்லி காவல் துறை அப்புறப்படுத்த வேண்டும். தில்லி காவல் துறைக்கு மூன்று நாள்கள் காலக்கெடு வழங்குகிறோம். அதற்குப் பிறகு நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். தில்லியில் வன்முறை ஏற்பட வேண்டும் என சிஏஏ எதிா்ப்புப் போராட்டக்காரா்கள் விரும்புகிறாா்கள். அதனால்தான் மக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வருகிறாா்கள். ஆனால், இன்னொரு ஷாகீன் பாக் போராட்டம் தில்லியில் இடம் பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT