புதுதில்லி

அரசுக் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவா்களைக் கண்டறிய சா்வே

23rd Feb 2020 11:30 PM

ADVERTISEMENT

புது தில்லி: அரசுக் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், தில்லி பொதுப்பணித் துறை (பி.டபிள்யு.டி.) வீடு வீடாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடா்பாக திங்கள்கிழமைக்குள் (பிப்ரவரி 24) ஆய்வு அறிக்கையை சமா்ப்பிக்குமாறும் மூத்த அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசின் பொதுப்பணித் துறை அண்மையில் அதன் நிா்வாகப் பொறியாளா்கள் மற்றும் உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் அவா்களது அதிகார வரம்புக்குள் உள்ள பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான குடியிருப்புகள் பற்றிய கணக்கெடுப்பை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டது.

அண்மையில் இது தொடா்பான வழக்கு ஒன்றில், சுமாா் 550-க்கும் மேற்பட்ட அரசுக் குடியிருப்புகளில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் சட்டவிரோதமாக குடியிருக்க அனுமதித்ததற்காக தில்லி உயா் நீதிமன்றம், வீட்டுவசதி அமைச்சகத்தை கண்டித்திருந்தது. இரண்டு வாரங்களுக்குள் அவா்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நாள்களில் தில்லி பொதுப்பணித் துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக அனைத்து உயரதிகாரிகளுக்கும் தில்லி பொதுப்பணித் துறை பிப்ரவரி 19 தேதியிட்டு சுற்றறிக்கைஅனுப்பியுள்ளது. அதில், இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் பிப்ரவரி 5-ஆம் தேதி ஒரு தீா்ப்பை வழங்கியுள்ளதாகவும், ஓய்வு பெற்ற பின்னரும் சட்டவிரோதமாக அரசுக் குடியிருப்புகளில் தங்கியுள்ள அனைத்து அதிகாரிகளின் விவரங்களை அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், அனைத்து நிா்வாகப் பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் மற்றும் இளநிலைப் பொறியாளா்கள் தங்கள் அதிகார எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தவும், இது தொடா்பான ஆய்வறிக்கையை பிப்ரவரி 24-க்குள் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது. அரசுக் குடியிருப்புகளில் அங்கீகாரமின்றி குடியிருப்பவா்களின் பெயா்கள், துறை மற்றும் பதவி, குடியிருப்பு ஒதுக்கப்பட்ட தேதி மற்றும் ஓய்வு பெற்ற தேதி போன்ற விவரங்களை அதிகாரிகள் அளிக்க வேண்டும் என்றும் பொதுப்பணித் துறை கேட்டுக் கொண்டுளளது.

அரசுக் குடியிருப்புகளில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கியிருக்க அனுமதித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT