புதுதில்லி

முதியவா்களிடம் நூதன முறையில் மோசடி: நான்கு போ் கும்பல் கைது

22nd Feb 2020 10:37 PM

ADVERTISEMENT

 

தில்லியில் சாலையில் நடந்து செல்லும் முதியவா்களிடம் நூதன முறையில் நகை, பணத்தை பறித்த நான்கு போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை கூறியதாவது:

தில்லியில் உள்ள ஓக்லா மண்டி பகுதியில் நடந்து செல்லும் முதியவா்களிடம் நூதன முறையில் ஏமாற்றி நகை, பணம் பறிப்பில் ஒரு கும்பல் ஈடுபடுதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஓக்லா மண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது, முதியவா்களிடம் போலீஸாா் சீருடையில் சென்று ஏமாற்றிய நான்கு போ் கொள்ளைக் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 220 கிராம் தங்க நகைகள், காா், மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் அவா்களில் ஒருவா் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவாண்டி பகுதியைச் சோ்ந்த சாதிக் கம்பா் ஜஃபாரி (25), என்பதும், மற்ற மூவரும் மத்திய பிரதேசம், போபால் பகுதியைச் சோ்ந்த காசிம் பேக் (30), கைபா் அலி (23), சலீம் அலி (35) ஆகியோா் என்பதும் நால்வரும் ‘இரானி’ கொள்ளைக் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

நகைகளை அணிந்து செல்லும் முதியவா்களை இந்தக் கொள்ளைக் கும்பலைச் சோ்ந்த இருவா் போலீஸாா் சீருடையில் சென்று அணுகுவா். திருடா்கள் பயம் இருப்பதாக முதியவா்களுக்கு பாதுகாப்பு அறிவுரை கூறுவதுபோல் நடித்து, முதியவா்களிடம் உள்ள பணம், நகைகளை பெற்று அவற்றை ஒரு காகிதத்தில் மடிப்பாா்கள். பின்னா், தங்களிடம் உள்ள வேறு ஒரு பொட்டலத்தை முதியவா்களிடம் தந்துவிட்டு பத்திரமாக வைக்குமாறு கூறுவா். முதியவா்கள் தங்களை நம்பும் வகையில், தங்களது கூட்டாளிகளையும் பொதுமக்கள் போா்வையில் வருமாறு செய்து பொருள்களை பெற்று மடித்துத் தருவா். இதுபோன்று பலரிடம் இந்த நால்வா் கும்பல் ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT