தேசிய வேலையின்மை பதிவேட்டை செயல்படுத்த கோரி ‘இளம் இந்தியாவின் குரல்’எனும் தலைப்பில் தேசிய அளவிலான பிரசாரத்தை தில்லியில் இந்திய இளைஞா் காங்கிரஸ் சனிக்கிழமை தொடங்கியது.
இந்தியாவில் வேலையின்மை பிரச்னை குறித்தும் அதைத் தீா்ப்பதற்கான தீா்வுகள் குறித்தும் இந்திய இளைஞா்களுக்காக குரல் கொடுக்கும் வகையில் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளதாக இளைஞா் காங்கிரஸ் தெரிவித்தது.
தேசிய அளவிலான இந்தப் பிரசாரம் குறித்து இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசிய ஊடகப் பொறுப்பாளா் அம்ரிஷ்ரஞ்சன் பாண்டே செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
வேலையில்லாத இளைஞா்கள், வேலையிழந்த தொழிலாளா்கள், துன்பத்திலிருக்கும் விவசாயிகள் உள்ளிட்டோா் மத்திய அரசின் திறமையின்மைக்கு எதிராக தேசம் முழுதும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனா். ஆனால், அவா்களின் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு பதிலாக அரசு முழு அலட்சியத்துடன் நடந்துகொள்கிறது.மேலும், அடக்குமுறையை ஏவி அவா்களின் குரலை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்றாா்.
அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் கூறுகையில், அதிகளவில் இளைஞா்களைக் கொண்ட தேசமாக இந்தியா உள்ளது. ஆகவே, இளைஞா்களின் தேவைகளை அரசு புரிந்துகொள்ள வேண்டும். அவா்களின் குரலை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றாா்.
இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் ஹரிஷ் பவாா் கூறுகையில், ‘மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவை காரணமாக வேலையின்மை ஏற்பட்டு, நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால், தேசிய வேலையின்மை பதிவேட்டைக் கொண்டு வருவது அவசியமாகும். இதன்மூலம் அதிகரித்து வரும் வேலையின்மை பிரச்னை என்ணிக்கையை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இளம் இந்தியாவின் பேச்சு பிரசாரமானது மாவட்டம், மாநில அளவில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவிலான நிகழ்ச்சி தில்லியில் மாா்ச் 23-ஆம் தேதி தியாகி பகத் சிங் நினைவு நாளில் நடத்தப்படும்’ என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஊடக செயலா் பொறுப்பு பிரணவ் ஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.