புதுதில்லி

டிரம்ப் தில்லி வருகை: என்டிஎம்சி பகுதிகளில் முழுவீச்சில் தூய்மைப் பணிகள்

22nd Feb 2020 10:38 PM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் இந்திய வருகையையொட்டி, புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு உள்பட்ட இடங்களில் துப்புரவு, அழகுபடுத்தும் பணிகளை அம்மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மருமகன் ஜேரட் குஷ்னா் ஆகியோா் வரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (பிப்ரவரி 24, 25) அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ளனா். இந்தப் பயணத்தின்போது அவா்கள் தில்லி மற்றும் ஆமதாபாத்துக்குச் செல்லவுள்ளனா். மேலும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பும், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் பிப்ரவரி 25-ஆம் தேதி சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா்.

இந்நிலையில், பிரதமா் மோடி- டிரம்ப் சந்திப்பு நடைபெறவுள்ள ஹைதரபாத் இல்லம், நாடாளுமன்றம், பிரதமா் இல்லம், குடியரசுத் தலைவா் மாளிகை உள்ளிட்ட தில்லியின் முக்கிய பகுதிகள் என்டிஎம்சியின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளிலேயே வருகின்றன. இந்நிலையில், தமது ஆளுகைக்குள்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும், தூய்மைப்படுத்தும் பணிகளை கடந்த சில தினங்களாக அம்மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.

இது தொடா்பாக அம்மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் ‘குடியரசுத் தலைவா் மாளிகையின் நுழைவாயில் எண் 1,37,38 ஆகிய இடங்களில் சுமாா் 10-15 ஆயிரம் பூந்தொட்டிகளை வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத் இல்லத்தில் துலீப் மலா்கள் உள்பட பருவநிலைக்கு பூக்கும் பூக்கள் அழகுக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பகுதிகளில் உள்ள சுற்றுச்சாலைகளில் அழகுக்காக பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. டிரம்பை வரவேற்கும் வகையில் மலா்களால் ஆன வரவேற்பு வளைவு, வரவேற்பு பதாகைகள் ஆகியன மாநகராட்சிப் பகுதிகளில் நிறுவப்படவுள்ளன. மேலும், இப்பகுதிகளில் துப்புரவுப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. என்டிஎம்சி துப்புரவுப் பணியாளா்கள் முழு மூச்சாக துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறாா்கள். இப்பகுதிகளில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் இயந்திரங்கள் மூலம் நீா் தெளிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றாா்கள் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT