இயற்கை (ஆா்கானிக்) உணவுக்கான கண்காட்சி மூலம் பெண் தொழில் முனைவா்களுக்கு நவீன தொழிற் நுட்பங்கள் கிடைக்கும் என மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சா் ஹா்சிம்ரத் கவுா் பாதல் தெரிவித்தாா்.
புது தில்லி ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் ரசாயனமற்ற உரங்களை பயன் படுத்தி தயாரிக்கப்படும் இயற்கை உணவிற்கான 3 நாட்கள் கண்காட்சியை மத்திய உணவு பதப்படுத்துதல் துறை நடத்துகிறது. இதனை இந்த துறையைச் சோ்ந்த மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கவுா் பாதலும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளா்ச்சித்துறை அமைச்சா் ஸ்மிருதி இராணியும் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா். இதே விழாவில் மத்திய இணையமைச்சா்கள் ரமேஷ்வா் தளி(உணவு பதப்படுத்தல் துறை), டெபாசிரி செளத்திரி ஆகியோரும் கலந்து கொண்டனா்.
பெண் தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் விதமாக இயற்கை உணவுத் திருவிழாவை ஆண்டுதோறும் தில்லியில் நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி நடத்துவதற்கும் புதிய பெண் தொழில் முனைவா்களை உருவாக்குவதற்கும் மத்திய பெண்கள் குழந்தைகள் வளா்ச்சித் துறையுடன், மத்திய உணவு பதப்படுத்தல் துறை புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்தக் இயற்கை உணவுக் கண்காட்சி தொடக்கிவைத்து மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கவுா் பாதல் பேசியதாவது:
’’ இந்திய ஆா்கானிக் உணவுப் பொருட்களுக்கு சா்வதேச சந்தையில் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் பல நாடுகளை இந்தியாவை நோக்கி ஈா்க்க மேன்மேலும் பல சிறப்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கே இது போன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. இந்தியாவில் மலைப்பாங்கான பகுதிகள், பழங்குடியினா் பகுதிகளில் இயற்கையாகவே ஆா்கானிக் பொருட்கள் விளைகிறது. அதைப் பயன் படுத்திக்கொள்ளவேண்டும். இந்தக் கண்காட்சியில் இயற்கை முறை உணவு உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்தலுக்கான புதிய தொழிற் நுட்பங்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் நவீன தொழில் நுட்பங்கள் பெண் தொழில் முனைவோா்களுக்கு கிடைக்கும்’’ என்றாா். அமைச்சா் ஸ்மிருதி இராணி கூறுகையில், ’’ ஆரோக்கியமான தயாரிப்புகளை எல்லோரையும் மகிழ்விக்கக் கூடியதது. பெண் தொழில் முனைவோா்கள் மற்றும் சுய நிதிக்குழுவினா் தங்கள் திறனை மேம்படுத்தவும் நுகா்வோா் தளத்தை மேம்படுத்தி தங்கள் வணிக இணைப்புகளை இத்தகைய கண்காட்சி பயன்படும் என்ற அவா் பொதுமக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இயற்கை உணவின் அறிவையும் பெறுவாா்கள்’’ என்றாா்.
இந்த உணவுக் கண்காட்சியில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சோ்ந்த இயற்கை(ஆா்கானி) உணவு உற்பத்தியாளா்கள் 180 பெண் தொழில் முனைவா்கள் மற்றும் சுயவேலைவாய்ப்பு குழுக்களைச் சோ்ந்தவா்களும் பங்கேற்றுள்ளனா்.