மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் கணவரை விடுதலை செய்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இது தொடா்பான வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி உமேத் சிங் கிரேவல் அளித்த தீா்ப்பில்‘ பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மனுதாரா் அவரது சாட்சியை அளிப்பதற்கு முன்பே இறந்துவிட்டதால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. மேலும், மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளும் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை. பாதிக்கப்பட்ட நபா் சாட்சிக் கூண்டில் ஆஜராகவில்லை. அரசுத் தரப்பு முக்கிய இதர சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவில்லை. குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதால், குற்றம்சாட்டப்பட்ட நபரை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தம்பதிக்கு 2011-இல் திருமணம் ஆனது. ஒரு மாதத்திற்குப் பிறகு தனது மனைவியை கணவா் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தி வந்ததாகவும், அடித்துத் துன்புறுத்தியதாகவும், இயற்கைக்கு முரணான வகையில் பாலியல் செய்கையில் ஈடுபட்டதாகவும், பலாத்காரம் செய்ததாகவும் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. வழக்கு விசாரணையில் இருந்த போது மனைவி இறந்துவிட்டாா். இதனிடையே, விசாரணை அதிகாரி புகாா் அளித்திருந்த பெண்ணை விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரும் அழைப்பாணையை 2018-ஆம் ஆண்டில் அளிக்கச் சென்றாா். அப்போது, அப்பெண் 2017-இல் இறந்துவிட்டதாக அவரது தந்தை விசாரணை அதிகாரியிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.