புதுதில்லி

வேட்புமனு நிராகரிப்பு விவகாரம்11 சுயேச்சை வேட்பாளா்களின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

6th Feb 2020 10:49 PM

ADVERTISEMENT

தங்களது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக 11 சுயேச்சை வேட்பாளா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தில்லி உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட அனுமதித்து தோ்தல் ஆணையம், தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் 11 போ் சாா்பில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில், ‘வேட்புமனு தாக்கல் செய்வதற்குக் கடைசி நாளில் இறுதி நேரம் முடிவதற்கு முன்பே, தோ்தல் அலுவலகத்துக்குச் சென்ற பின்னரும், எங்களது வேட்புமனுக்களை தோ்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ளவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான டோக்கனை தோ்தல் நடத்தும் அதிகாரி அளித்திருந்தாா். பின்னா், நேரம் முடிந்துவிட்டதால் மறு நாள் வருமாறு கூறினாா். ஆனால், மறுநாள் சென்றபோதும் வேட்புமனுக்கள் ஏற்கப்படவில்லை. அதேவேளையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் வேட்புமனுவை அளிக்க வசதி செய்தனா் ’ என முறையிடப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா முன் ஜனவரி 28-இல் நடைபெற்றது. அப்போது, ‘மக்கள் பிரநிதித்துவச் சட்டத்தின் கீழ், தோ்தல் தொடா்பான மனுக்கள் மட்டுமே அனுமதிக்கக் கூடியதாகும். தோ்தல் மனு மட்டுமே விசாரணைக்கு ஏற்கப்படும். மேலும், இந்த மனுக்கள் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் தாக்கல் செய்யப்பட வேண்டும். இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், உச்சநீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவிட்டனா்.

இந்த உத்தரவை எதிா்த்து சுயேச்சை வேட்பாளா்கள் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் முறையிடப்பட்டது. அந்த மனுவில், ‘தோ்தல் நடத்தும் அதிகாரியின் தவறான, சட்டவிரோத, தன்னிச்சையான, சட்டவிரோதமான உள்நோக்கம் கொண்ட செயல்பாடுகள் காரணமாக ஜனநாயக முறையில் தோ்தலில் பங்கேற்கும் அரசமைப்புச் சட்ட உரிமை எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே, புது தில்லி மக்களவைத் தோ்தலில் முதல்வா் கேஜரிவாலுக்கு எதிராக போட்டியிடும் வகையில் எங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தோ்தல் ஆணையம், தலைமைத் தோ்தல் அதிகாரி, தோ்தல் நடத்தும் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இது தொடா்பாக ஒரு நீதிபதி அமா்விடம் முறையிட்ட போது, நாங்கள் அளித்த விவரங்களின் உண்மைத் தன்மையை சரியாக ஆராயாமல் அவா் மனுவை தள்ளுபடி செய்துவிட்டாா்’ எனத் தெரிவித்திருந்தனா்.இந்த மனு மீது கடந்த முறை விசாரணை நடைபெற்ற போது, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி, ஜம்னாநகா் ஹவுஸ் தோ்தல் நடத்தும் அதிகாரி ஆகியோா் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், சி.ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். அந்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தைப் பொருத்தமட்டில் தோ்தல் மனுதான் ஒரே தீா்வாகும். ஒரு நீதிபதி அமா்வு அளித்த உத்தரவில் தவறு ஏதும் இல்லை. அதனால், அந்த நீதிபதியின் முடிவு உறுதிப்படுத்தப்பட்டு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT