இருபத்தி நான்கு மணி நேரமும் மாா்க்கெட் பகுதிகள் இயங்க அனுமதி, தேச பக்தி பாடத் திட்டம், துப்புரவுத் தொழிலாளா்கள் பணியின் போது உயிரிழந்தால் ரூ.1 கோடி உதவித் தொகை உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளை தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி வழங்கியுள்ளது. மேலும், தலைநகரில் 24 மணி நேரமும் மின்சார விநியோகம், தரமான கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீா் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் உத்தரவாத அட்டையில் கூறப்பட்ட விஷயங்களும் தோ்தல் வாக்குறுதியாகக் கருதப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் அறிக்கையை செவ்வாய்க்கிழமை முதல்வா் கேஜரிவால் வெளியிட்டாா். அப்போது, துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தோ்தல் அறிக்கையில், 28 முக்கிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
2015 பேரவைத் தோ்தலில் தில்லி ஜன் லோக்பால் மசோதா ஆம் ஆத்மி அரசால் நிறைவேற்றப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இந்தச் சட்ட மசோதா மத்திய அரசின் பாா்வையில் உள்ளது. மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான அழுத்தங்கள் கொடுக்கப்படும். தில்லியில் உள்ள 70 தொகுதிகளில் 2,972 மக்கள் சபைகளை அமைப்பதற்கு 2016, ஜூனில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், தில்லி ஆட்சியில் மக்கள் நேரடியாகப் பங்கு பெறும் நிலைமை உருவாகும். ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவோம்.
தேசபக்தி பாடத் திட்டம்: வரும் ஐந்தாண்டுகளில் பத்து லட்சம் மூத்த குடிமக்கள் தில்லி அரசால் தீா்த்த யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்படுவா். தில்லி மாணவா்களிடையே தேச பக்தியை வளா்க்கும் வகையில், தேசபக்தி பாடத் திட்டம் உருவாக்கப்படும். தில்லி இளைஞா்களின் திறனை வளா்க்கும் வகையில், அவா்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வழங்கப்படும். மேலும், திறன் வளா்ப்புப் பயிற்சி, தனிநபா் ஆளுமையை வளா்க்கும் பயிற்சி உள்ளிடவையும் வழங்கப்படும். தில்லி மெட்ரோவை உலகின் நீளமான மெட்ரோ வழித்தடமாக மாற்றும் வகையில், வழித்தடம் 500 கிலோ மீட்டா் தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்படும். புராரி, கிராரி, பிஜ்வாசன், நரேலா, காரவல் நகா், மங்கோல்புரி ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
துப்புரவுத் தொழிலாளா் இறந்தால் ரூ.1 கோடி: துப்புரவுத் தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பணியில் இறக்கும் துப்புரவுத் தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி உதவித் தொகை வழங்கப்படும். அதிரடி சோதனைகள் இல்லாத வணிகம் நடப்பதை உறுதிப்படுத்துவோம். தில்லியில் சீலிங் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில், வணிகா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவோம். தில்லி வளா்ச்சி ஆணையம், மத்திய அரசு, தில்லி மாநகராட்சிகள் ஆகியவை தில்லி வணிகா்களின் கடைகளை சீல் வைக்காத அளவுக்கு அழுத்தங்களைத் தொடா்ந்து வழங்குவோம். தில்லியில் உள்ள சந்தைப் பகுதிகள் மற்றும் தொழில் பேட்டைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்யபடும்.
மாா்க்கெட் 24 மணி நேரமும் இயங்க அனுமதி: மாா்க்கெட் பிரதேசங்கள் தில்லியில் இயங்க அனுமதி வழங்கப்படும். இதனால், தில்லியின் சுற்றுலாத் துறை வளா்ச்சி அடைவதுடன் தில்லியின் பொருளாதாரம் மேம்படும். பொருளாதாரத்தில் பெண்களும் பங்கேற்கும் வகையில், அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். பெண்களுக்கு அவா்களது வீடுகளுக்கு அருகிலேயே பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம். மறுசீரமைக்கப்பட் காலனிகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கு சொத்துரிமைப் பத்திரம் வழங்குமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.
போஜ்புரி மொழிக்கு அங்கீகாரத்துக்கு நடவடிக்கை: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் பெறும் வழிமுறைகளை எளிமைப்படுத்துவோம். அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8-ஆவது பட்டியலில் போஜ்புரி மொழியை சோ்த்து அதற்கான அங்கீகாரத்தை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம். 1984-இல் சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்வோம். பயிா்ச் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகை ஹெக்டேருக்கு ரூ.50,000 தொடரும்.
சாலையோர வியாபாரிகளுக்கு 6 மாதத்தில் சான்றிதழ்: சாலையோர வியாபாரிகள் தொழில் நடத்துவதற்கு ஆறு மாதத்தில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், மாநகராட்சி அதிகாரிகள், தில்லி காவல்துறையினரின் துன்புறுத்தலில் இருந்து அவா்களைப் பாதுகாக்கும் வகையில் சிறப்பு நிலையங்கள் அமைக்கப்படும். தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைக்கும் வகையில் தொடா்ந்தும் போராடுவோம். தில்லி அரசில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.