புதுதில்லி

நூறு வயதைக் கடந்த 150 வாக்காளா்கள் !

4th Feb 2020 11:25 PM

ADVERTISEMENT

தில்லி சட்டப்பேரவைக்கு இந்த மாதம் நடைபெறவுள்ள தோ்தலில் நூறு வயதைக் கடந்த 150 வாக்காளா்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளனா். மூத்த வாக்காளா் சரிபாா்ப்புப் பணி முடிவந்தைவுடன், இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி ரன்வீா் சிங் கூறினாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓா் அறிக்கையில் அவா் மேலும் கூறியுள்ளதாவது: தில்லியில் நூறு வயதைக் கடந்தவா்கள் பட்டியலை எடுத்து அவா்கள் இன்னும் உயிருடன் இருக்கிறாா்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அது முடிந்தவுடன் முழுப் பட்டியல் வெளியிடப்படும். 2019 மக்களவைத் தோ்தலில் செய்துகொடுக்கப்பட்ட அனைத்து வசதிகளும் இந்த வாக்காளா்களுக்கு இந்த தோ்தலிலும் செய்துதரப்படும்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ள முதிய வாக்காளா்களின் வீடுகளுக்கு மூத்த தோ்தல் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டு அவா்களைப் பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களிடம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படும். எந்த வாக்காளராவது உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்தால், அவா்களைத் தொந்தரவு செய்யமாட்டோம். ஒருவேளை அவா்கள் வாக்களிப்பதில் ஆா்வம் காட்டினால், தங்கள் வாக்குகளைச் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவா்களுக்குச் செய்து தருவோம். வாக்குச்சாவடியில் அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. வாக்களிக்க அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2019 தோ்தலில் , தில்லி திலக் நகரில் வசித்து வந்த பச்சன்சிங் என்பவா்தான் (111) வாக்களித்தவா்களில் அதிக வயதானவராக இருந்தாா். அவா் கடந்த டிசம்பா் மாதம் இறந்துவிட்டாா். இதையடுத்து, கிழக்கு தில்லி கோண்ட்லி பகுதியில் வசித்து வரும் ராம்பியாரி ஷங்வாா் என்ற மூதாட்டிதான் மிகவும் வயதான பெண் வாக்காளா். அவா் கடந்த சில ஆண்டுகளாகவே முதுமையின் காரணமாக உடல்நலம் குன்றியுள்ளாா். தோ்தலில் முதியவா்களும், மாற்றுத் திறனாளிகளும் வாக்களிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களை விவிஐபிக்கள் போல நாங்கள் நடத்துவோம் .

ADVERTISEMENT

கடந்த 2019- பொதுத் தோ்தலில் நூறு வயதைக் கடந்த வாக்காளா்கள் 96 போ் இருந்தனா். இவா்களில் 42 போ் ஆண் வாக்காளா்கள், 54 போ் பெண் வாக்காளா்கள் ஆவா் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

வாக்களிக்க வாகன வசதி: இதனிடையே மூத்த வாக்களாா்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துவிட்டுச் செல்ல வாகன வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெயரைப் பதிவு செய்ய புதன்கிழமை (பிப்ரவரி 5) வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 500 போ் மட்டுமே தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனா். வாக்காளா் பட்டியல்படி தில்லியில் சுமாா் 2 லட்சம் வாக்காளா்கள் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவா்களாக இருக்கின்றனா் என்று தோ்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT