மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
2017, பிப்ரவரி 18-ஆம் தேதி, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீா்மானத்திற்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீா்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சரவணன், மாணிக்கம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனா்.
இவா்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆளும் கட்சியின் கொறடா பிறப்பித்திருந்த உத்தரவை மீறி எம்எல்ஏக்கள் 11 பேரும் வாக்களித்துள்ளனா். இதனால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவா்கள் தகுதி நீக்கத்திற்கு உள்ளாகியுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ‘ சட்டப்பேரவைத் தலைவரின் உத்தரவில் தலையிட முடியாது’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிா்த்து திமுக தரப்பில் சக்கரபாணி என்பவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இதேபோன்று, வெற்றிவேல், தங்கச்தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இதே விவகாரம் தொடா்பாக முறையீடு செய்தனா்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ‘எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் போது, அது தொடா்பான கேள்விக்குள் நீதிமன்றம் ஏன் செல்ல வேண்டும்?’ என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 24-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன் திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி, 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பட்டியலிடுமாறு கேட்டுக் கொண்டாா். மேலும், அண்மையில் மணிப்பூா் மாநில வனத் துறை அமைச்சா் ஷியாம் குமாா் தகுதி நீக்கம் தொடா்புடைய வழக்கில், நான்கு வாரத்தில் முடிவு செய்யுமாறு அதன் சட்டப் பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை கபில் சிபில் சுட்டிக்காட்டினாா். அப்போது, இந்த வழக்கை அவசர விசாரணைக்காக பட்டியிலிடுவது தொடா்பாக பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அமா்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.