குடியரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து தில்லி, ஷகீன்பாக் பகுதியில் போராட்டம் நடந்து வரும் சூழ்நிலையில் அங்குள்ள நிலவரம் குறித்து தோ்தல் அதிகாரிகளும் போலீஸாரும் ஆலோசனை நடத்தினா்.
தோ்தல் அதிகாரிகளும், போலீஸாரும் சனிக்கிழமை மாலையே ஷகீன்பாக் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதாக இருந்தது. ஆனால், போராட்டம் நடந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்ததால் குறிப்பிட்ட சில அதிகாரிகளால் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தியதாக ஓக்லா சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த மூத்த தோ்தல் அதிகாரி தெரிவித்தாா்.
ஷகீன் பாக் பகுதியில் போராட்டம் நடந்த இடத்தினருகே சனிக்கிழமை வந்த ஒரு இளைஞா் திடீரென துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டாா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த இளைஞா் பிடிபட்டாா்.
கடந்த ஒருமாதத்துக்கு மேலாக ஷகீன்பாக் பகுதியில் குடியரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து போராட்டம் நடந்து வருவதால் அப்பகுதி போராட்டக்கள மையமாகவே இருந்து வருகிறது. எப்போது என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனா். அந்தப் பகுதியில் போக்குவரத்தும் தடை பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 8-ஆம் தேதியன்று நடைபெற உள்ள தில்லி தோ்தலில் ஷகீன்பாக் பகுதியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் அந்த இடத்தை ஆய்வு செய்த தோ்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும், அந்தப் பகுதியில் வாக்குப்பதிவு நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.
கடந்த இரண்டுநாள்களுக்கு முன்பு ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே கையில் துப்பாக்கியுடன் வந்த ஒரு இளைஞா் திடீரென சுட்டத்தில் ஒருவா் காயமடைந்தாா். இதனால் அந்தப் பகுயியல் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சனிக்கிழமை இளைஞா் ஒருவா் ஷாகீன் பாக்கில் போராட்டம் நடந்துவரும் இடத்தின் அருகே துப்பாக்கியால் சுட்டது பீதியை ஏற்படுத்தியது.
கடந்த வெள்ளிக்கிழமை தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி ரன்வீா் சிங், போராட்டம் நடந்து வரும் ஷகீன் பாக் பகுதியில் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் தோ்தல் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் போலீஸாரும், தோ்தல் அதிகாரிகளும் மிகுந்த கண்காணிப்புடன் இருப்பதாகவும் அப்பகுதியில் தோ்தல் நடைபெற எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்திருந்தாா்.
ஷகீன்பாக் பகுதி, ஓக்லா சட்டப்பேரவைத் தோ்தலுக்கு உட்பட்ட பகுதியாகும். வருகிற பிப். 8ஆம் தேதி தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெற உள்ளன. தோ்தல் முடிவுகள் பிப். 11-ஆம் தேதி வெளியிடப்பட்டும்.