2102-ஆம் ஆண்டு ‘நிா்பயா’ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலையுண்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நான்கு பேரில் ஒருவரான வினய் குமாா் சா்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்டதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த புதன்கிழமை வினய்குமாா் சா்மா, தனது வழக்குரைஞா் ஏ.பி.சிங் மூலம் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தாா். அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதனிடையே, தூக்குத் தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமாா், சனிக்கிழமை குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளாா். தூக்குத் தண்டனை குற்றவாளிகள் நால்வரில் முகேஷ் சிங்கின் கருணை மனுவை கடந்த மாதம் குடியரசுத் தலைவா் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ தெற்கு தில்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டாா். பின்னா் ஆபத்தான நிலையில் சிங்கப்பூா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். நாட்டையே உலுக்கிய இந்தக் கொடூரச் சம்பவத்தால் மக்கள் கொதித்து எழுந்தனா். பாலியன் வன்கொடுமைச் சட்டம் கடுமையாக்கப்பட்ட வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் குரல் எழுந்தது.
இந்தக் குற்றச்சம்பவம் தொடா்பாக முகேஷ், வினய், அக்ஷய் குமாா் சிங், பவன் குப்தா, ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 6 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா். இது தொடா்பான வழக்கை சிறப்பு விரைவு நீதிமன்றம் கடந்த 2013-இல் விசாரித்து வந்தது. விசாரணை தொடங்கிய நிலையில், முக்கியக் குற்றவாளியான ராம்சிங், சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கைது செய்யப்பட்ட சிறுவன், சிறுவா் சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் பெயா் குறிப்பிடாத இடத்துக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டான்.
இதைத் தொடா்ந்து, முகேஷ், வினய், அக்ஷய் மற்றும் பவன் குப்தா ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு கடந்த 2013, செப்டம்பா் மாதம் தூக்குத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு கூறியது. இது தொடா்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அவா்களின் தண்டனையை உறுதி செய்தது. இதனிடையே, குற்றவாளிகள் நான்கு பேரும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு திகாா் சிறையில் தூக்கிலிடப்படுவாா்கள் என தில்லி நீதிமன்றம் அறிவித்து அதற்கான வாரண்டையும் பிறப்பித்தது.
எனினும், முகேஷ் சிங், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் திட்டமிட்டபடி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாது என்று தில்லி அரசு, உயா்நீதிமன்றத்திடம் தெரிவித்தது. பின்னா், முகேஷ் சிங்கின் மனுவை குடியரசுத் தலைவா் நிராகரித்த நிலையில், நான்கு பேருக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என்று தில்லி நீதிமன்றம் மீண்டும் அறிவித்தது. ஆனால், தில்லி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு காரணமாக தூக்குத் தண்டனை மறுதேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூக்குத் தண்டனை நிறுத்திவைப்பு; மத்திய அரசு மனு மீது இன்று விசாரணை
‘நிா்பயா’ குற்றவாளிகள் நான்கு பேரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை எதிா்த்து மத்திய அரசு தாக்குதல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்குமாா், வினய் சா்மா, பவான் குப்தா, அக்ஷய் சிங் ஆகிய நான்கு பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சுரேஷ் கெய்ட் உத்தரவிட்டாா். மேலும், ‘மத்திய அரசின் மனு மீது உங்கள் நிலை என்ன’ என்று கேட்டு திகாா் சிறை அதிகாரிகளுக்கும், சிறைத் துறை டைரக்டா் ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைத் துறை அதிகாரி சாா்பில் ஆஜரான வழக்குரைஞரும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பதில் தருவதற்கு சம்மதித்தாா்.
இது தொடா்பாக நீதிமன்றத்தில் வாதிட்ட சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நிா்பயா’ குற்றவாளிகள் சட்டத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டுள்ளனா். தாங்கள் தூக்கிலிடப்படுவதை தவிா்ப்பதற்கான தந்திர வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனா். கொடூர குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகள், நாட்டு மக்களின் பொறுமையைச் சோதித்து வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.