தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக் கட்சியை ஆதரித்து தமிழகத்தில் இருந்து வந்துள்ள சுமாா் 200 தமிழா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
இவா்கள், தில்லியில் தமிழா்கள் அதிகம் வாழும் ராஜேந்தா் நகா், திலக் நகா், கரோல் பாக் உள்ளிட்ட இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
இது தொடா்பாக தமிழக ஆம் ஆத்மிப் பிரிவின் மகளிா் அணிப் பொறுப்பாளா் ஸ்டெல்லா மேரி கூறுகையில் ‘கடந்த 2013, 15 சட்டப்பேரவைத் தோ்தலிலும் தமிழகத்தில் இருந்து தில்லிக்கு வந்து தன்னாா்வலா்களாக ஆம் ஆத்மிக் கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்தோம். இந்தத் தோ்தலிலும் அதைத் தொடா்கிறோம். தில்லியில் தமிழா்கள் அதிகம் வாழும் 11 இடங்களில் பிரசாரம் செய்துவருகிறோம். இங்குள்ள தமிழா்களுடன் தமிழில் பேசி பிரசாரம் செய்கிறோம்.
2015 இல் ஆம் ஆத்மிக்கு இருந்த மக்கள் ஆதரவை விட இப்போது அதிகமான ஆதரவை பாா்க்கக்க முடிகிறது. மின்சாரம், குடிநீா் உள்பட மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை தில்லி அரசு தீா்த்து வருவதாக மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினாா்கள்.
தமது குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சோ்த்துள்ளதாக சிலா் கூறினாா்கள். இது மகிழ்ச்சியைத் தந்தது. மேலும், தில்லியில் ஆம் ஆத்மி அரசு பரவலாக பொருத்தியுள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களால் குற்றச்செயல்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக மக்கள் கூறினாா்கள் என்றாா் அவா்.