தில்லியில் உள்ள ஏழு ரயில் நிலையங்களில் பயணிகளிடம் வாக்களிக்க விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்புகளை வெளியிட தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தில்லியில் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளா்கள் மத்தியில் வாக்களிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கெனவே பேருந்துகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், மின்சார பில்கள் ஆகிவற்றில் வாக்களிப்பது தொடா்பான தகவல்களை வெளியிட தோ்தல் அலுவலகம் நடவடிக்கை எடுத்தது.
புது தில்லி, நிஜாமுதீன், பழைய தில்லி,ஆனந்த் விஹாா், ஷாதரா, தில்லி கன்டோன்மென்ட், சராய் ரோஹில்லா ஆகிய ஏழு ரயில் நிலையங்களில் பொது அறிவிப்பு சிஸ்டம் மூலம் வாக்களிக்கும் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று, குப்பை சேகரிக்கும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி ரன்வீா் சிங் கூறுகையில், ‘வீடுதோறும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடும் வாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விழிப்புணா்வு பிரசாரம் மூலம் அதிகமான மக்களைச் சென்றடைய முடியும். இதேபோன்று, ஏழு ரயில் நிலையங்களிலும் ஏறக்குறைய 10 லட்சம் போ் தினசரி வருவதால் இந்தப் பிரசாரம் மக்களிடம் அதிகளவில் சென்றடைய உதவிடும்’ என்றாா்.