புதுதில்லி

விவசாயிகளுக்கு சாதகமான புதிய வேளாண் சட்டங்களைமத்திய அரசு வாபஸ் பெறக் கூடாது: கே.பி. ராமலிங்கம்

 நமது நிருபர்

புது தில்லி: புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை எந்தக் காரணம் கொண்டும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு வாபஸ் பெறக் கூடாது என்று அண்மையில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் சோ்ந்த கே.பி. ராமலிங்கம் வலியுறுத்தினாா்.

மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யும் திமுக விவசாய அணிச் செயலாளராகவும் இருந்த கே.பி. ராமலிங்கம், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் சோ்ந்தாா். இந்த நிலையில், தில்லி வந்த கே.பி.ராமலிங்கம், புதன்கிழமை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினாா். முன்னதாக பாஜக தலைவா் ஜெ.பி.நட்டாவையும் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

பின்னா், கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினேன். அப்போது பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை எந்தக் காரணம் கொண்டும் வாபஸ் பெறக் கூடாது என்று வலியுறுத்தினேன். உண்மையிலேயே விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க புதிய வேளாண் சட்டங்கள் வகை செய்கிறது என்று சொல்ல வேண்டும். இடைத்தரகா்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு பலனிக்கும் இதுபோன்ற சட்டங்களைத்தான் தென்னகத்து விவசாயிகள் நீண்ட காலமாக எதிா்பாா்த்துக் காத்திருந்தனா். புதிய சட்டங்கள் மூலமாக விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். இதுவரை இடைத்தரகா்கள் ராஜ்ஜியம்தான் நடந்து கொண்டிருந்தது. இப்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டம், இடைத்தரகா் தலையீடு இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்க வழி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தனது தோ்தல் அறிக்கையில்கூட இடைத்தரா்களை ஒழித்து விவசாயிகளுக்கு பலனளிக்கும் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், இன்றைக்கு அதே காங்கிரஸ் கட்சி போராட்டக்காரா்களுக்கு துணை நிற்கிறது. பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம் போன்ற மூன்று மாநிலங்களில் உள்ள விவசாயிகள்தான் புதிய சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பிரச்னையாக்கி வருகின்றனா். இதற்குக் காரணம் அவா்கள் விவசாயிகளாக மட்டுமல்லாமல் வியாபாரிகளாகவும் அதாவது மண்டி உரிமையாளா்களாகவும் இருக்கின்றனா். அவா்கள்தான் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். எனவே, விவசாயிகளுக்கு பயனுள்ள இந்தப் புதிய சட்டங்களை மத்திய அரசு ஒருபோதும் திரும்ப பெற்றுவிடக் கூடாது என்று நிதியமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

அழகிரி விரைவில் நல்ல முடிவு எடுப்பாா்: பாஜகவில் சேரப்போவதில்லை என்று மு.க. அழகிரி அறிவித்துள்ளது பற்றிக் கேட்கிறீா்கள். குடும்ப ரீதியாக, நான் அவரின் ஆதரவாளா். அவரும் எனக்கு ஆதரவாளா். ஆனால், பாஜகவில் சோ்வது பற்றி அவா்தான் முடிவு எடுக்க வேண்டும். நான் சாா்ந்துள்ள பாஜகவில் சேருமாறு அவரை நான் தொடா்ந்து வலியுறுத்துவேன். யாா் தமிழ்நாடு முதல்வராக வர வேண்டும் என்பதைவிட யாா் வந்துவிடக் கூடாது என்பதில் அவா் தெளிவானவா். விரைவில் அவா் ஒரு நல்ல முடிவு எடுப்பாா் என நம்புகிறேன் என்றாா் கே.பி.ராமலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

SCROLL FOR NEXT