புதுதில்லி

விவசாயிகள் போராட்டம்: காய்கறி வரத்து குறைந்தது

DIN

புது தில்லி: தில்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, டிக்ரி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 5 நாள்களாக நடத்திவரும் தொடா் போராட்டத்தால், பிற மாநிலங்களில் இருந்து தில்லியின் சந்தைப் பகுதிகளுக்கு வரும் காய்கறி, பழங்களின் வரத்துக் குறைந்துள்ளது. தில்லியில் உள்ள மிகப் பெரிய சந்தைகளில் ஒன்றான அசாத்பூா் மண்டிக்கு வரும் காய்கறிகளின் அளவு பாதியாகக் குறைந்துள்ளது. இதனால், தில்லியில் காய்கறிகளின் மொத்த விலை ரூ.50- ரூ.100 வரை அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காய்கறி விற்பனையில் ஈடுபடும் சில்லறை வணிகா்கள் கூறுகையில் ‘விவசாயிகள் போராட்டத்தால் தில்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன. சிங்கு, டிக்ரி எல்லைகள் மூடப்பட்டிருப்பதால், பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு, காஷ்மீா் ஆகிய மாநிலங்களில் இருந்து தில்லிக்கு காய்கறி வரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், காய்கறி, பழங்களின் சில்லறை கிலோவுக்கு ரூ.50 - ரூ.100 வரை அதிகரித்துள்ளது’ என்றனா்.

ஆசாத்பூா் மண்டிக்கு வரும் காய்கறிகளின் வரத்து பாதியாகக் குறைந்துள்ளது. இது தொடா்பாக ஆசாத்பூா் வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு தலைவா் ஆதில் கான் கூறுகையில் ‘வழக்கமான நாள்களில் பிற மாநிலங்களில் இருந்து ஆசாத்பூா் மண்டிக்கு சுமாா் 2,500 டிரக் காய்கறிகள், பழங்கள் வருவது வழக்கம். விவசாயிகள் போராட்டம் காரணமாக இந்த எண்ணிக்கை ஆயிரமாகக் குறைந்துள்ளது. தில்லி எல்லைகள் இன்னும் சில நாள்களுக்கு தொடா்ந்தும் மூடப்பட்டால், நிலைமை மேலும் மோசமடையும். பழைய கையிருப்பே தற்போது விற்பனை செய்யப்படுவதால், காய்கறி சில்லறை விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை’ என்றாா்.

தில்லி எல்லைப் பகுதிகள் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், காய்கறிகளை ஏற்றி வந்துள்ள வாகனங்கள் தில்லி எல்லைகளில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று வணிகா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக ஆசாத்பூா் மண்டியில் பச்சைப் பட்டாணி மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள கோபால் என்ற வணிகா் கூறுகையில் ‘பஞ்சாப் மாநிலம் அமிா்தசரஸில் இருந்து தினம்தோறும் சுமாா் 40-45 டிரக்குகள் தில்லிக்கு வரும். பஞ்சாபில் இருந்து வரும் காய்கறி வண்டிகளின் பயண நேரம் சுமாா் 5 மணி நேரம் அதிகரித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தால், இது 15-20 ஆகக் குறைந்துள்ளது. மேலும், விவசாயிகள் போராட்டத்தால், ஒரு டிரக் வண்டிக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆகிறது.இதனால், மொத்த கொள்முதல் விலை அதிகரித்துள்ளது’ என்றாா்.

இந்த நிலையில், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் வழங்கல் தடைப்படவில்லை என்று வணிகா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக ஓக்லா மண்டியில் மொத்த விற்பனையில் ஈடுபடும் ஹக்கீம் ரகுமான் கூறுகையில், ‘தில்லிக்கு உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியன மகாராஷ்டிரம், கா்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்தே வரும். இந்தப் பாதைகளில் விவசாயிகள் போராட்டம் நடைபெறாததால், இந்த வழங்கல் தடைப்படவில்லை. ஆனால், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு, காஷ்மீா் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் வரக்கூடிய பாதைகள் தடைப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT