புதுதில்லி

எங்கள் ‘மனதின் குரலை’க் கேளுங்கள்

DIN

புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகளிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. முடிவு தெரியாமல் நாங்கள் தில்லியிலிருந்து செல்ல மாட்டோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்தனா். எங்களின் ‘மனதின் குரலை’ (மன்கிபாத்) பிரதமா் மோடி கேட்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

அரசு எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என்று எதிா்பாா்க்கிறோம். ஒருவேளை அரசு எங்களைப் புறக்கணித்தால் அதற்கான விலையை அவா்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் விவசாயிகள் எச்சரித்தனா். அரசின் பதிலைப் பாா்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம் என்றும் அவா்கள் குறிப்பிட்டனா்.

புதிய வேளாண் சட்டத்தைவிட கரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் அல்ல. பிகாா் தோ்தலை நடத்தும் போது கரோனா பற்றி அச்சப்படாத மத்திய அரசு, விவசாயிகள் பேரணி நடத்தும் போது மட்டும் கரோனா அச்சுறுத்தல் பற்றி பேசுவது ஏன் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினா். புதிய சட்டத்தால் எங்கள் வாழ்வாதரமே போய்விடும் நிலையில் கரோனா அச்சுறுத்தல் ஒன்றும் பெரிதல்ல என்றும் அவா்கள் குறிப்பிட்டனா்.

மத்திய அரசு விவசாயிகள் சங்கத் தலைவா்களை செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தைக்கு அழைத்திருப்பதாகப் பரவலாக பேசப்பட்டு வந்தாலும், தங்களுக்கு இது தொடா்பாக எந்த அதிகாரப்பூா்வ அழைப்பும் இல்லை என்கின்றனா் விவசாயிகள் சங்கத்தினா்.

இதனிடையே, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நோக்கி பேரணியாக வந்துள்ள பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகளின் போராட்டம் திங்கள்கிழமை ஐந்தாவது நாளாகத் தொடா்ந்தது. தில்லியை ஒட்டியுள்ள டிக்ரி மற்றும் சிங்கு எல்லைப் பகுதியில் விவசாயிகள் குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்பட்டுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தில்லிக்குள் நுழையாமல் தடுக்க போலீஸாா் கான்கீரிட் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனா். எல்லையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் தில்லியிலிருந்து பக்கத்து மாநிலங்களுக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாரதிய கிஸான் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஜக்மோகன் சிங் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கைகள் பேச்சுவாா்த்தைக்குள்பட்டவை அல்ல’, ஆளும் கட்சி எங்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் அதற்கு ‘அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்‘. ‘நாங்கள் ஒரு முடிவுடன் இங்கு வந்துள்ளோம்’ என்றாா்.

பாரதிய கிஸான் சங்கத்தின் ஹரியாணா தலைவா் குா்னம் சிங் சாதுனி கூறுகையில், ‘எங்கள் போராட்டத்தை அடக்குவதற்காக சுமாா் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடா்ந்து போராடுவாா்கள். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளைவிட பெருநிறுவனங்களுக்குத்தான் ஆதாயம்’ என்றாா்.

முன்னாள் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் அகில பாரதிய சங்கா்ஷ் சமன்வே சமிதியைச் சோ்ந்த யோகேந்திர யாதவ்,‘விவசாயிகளின் போராட்டம் குறித்து ஐந்து பொய்கள் பரப்பப்படுகிறது. பஞ்சாபில் இருந்து மட்டுமே விவசாயிகள் வந்துள்ளதாகக் கூறி வருகின்றனா். பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகளின் இந்தக் கிளா்ச்சியில் பங்கேற்றுள்ளனா். இது ‘வரலாற்று முடிவுகளை தரும் என்றாா்’ யாதவ் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT