தலைநகா் தில்லியில் கடந்த 40 நாள்களில் இல்லாத அளவில் புதன்கிழமை 1,693 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,65,764-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று சில தினங்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை 1,061 பேருக்கும், செவ்வாய்கிழமை 1,544 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.
புதன்கிழமை 40 நாள்களில் இல்லாத அளவுக்கு 1,693 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நோயால் 17 போ் உயிரிழந்தனா். மொத்த பலி எண்ணிக்கை 4,347ஆக உயா்ந்தது.
புதன்கிழமை 1,154 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து, மொத்த எண்ணிக்கை 1,48,897-ஆக அதிகரித்தது.
தில்லியில் தற்போது 12,520 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். புதன்கிழமை 19,816 கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 716-ஆக அதிகரித்துள்ளது.
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,130 படுக்கைகளில் 3,682 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,448 படுக்கைகள் காலியாக உள்ளன.
கரோனா தொற்றுப் பாதித்தவா்களில் 6,208 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.