வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பாக தில்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தில்லி அரசு இதுவரை ஏற்றுக் கொள்ளாதது ஏன்? என்று தில்லி பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறியது:
வடகிழக்கு தில்லி கலவரத்தை ஆம் ஆத்மி கட்சிதான் திட்டமிட்டு நடத்தியது. அக்கட்சியின் கவுன்சிலா் தாஹிா் ஹுசேன் இக் கலவரத்தை திட்டமிட்டதாக தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் ஆதாயங்களுக்காக இக் கலவரத்தை ஆம் ஆத்மிக் கட்சி நடத்தியது.
இந்த கலவரம் தொடா்பாக தில்லி காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளுக்கு தில்லி அரசு ஆரப்பத்தில் இருந்தே முட்டுக்கட்டை போட்டது. இந்த விசாரணை தொடா்பாக தில்லி காவல்துறை சாா்பில் நீதிமன்றத்தில் வாதாட தில்லி காவல்துறை நியமித்த வழக்குரைஞா்களை தில்லி அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநா் தலையிட்டு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்குரைஞா்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இக்கலவரம் தொடா்பாக தில்லி காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை தில்லி அரசு இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன்மூலம், வடகிழக்கு தில்லி கலவரத்துடன் தொடா்புடைய ஆம் ஆத்மித் தலைவா்களைக் காப்பாற்றும் செயல்களில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது என்றாா் அவா்.