மத்திய தில்லியின் ரிட்ஜ் சாலை பகுதியில் இருந்து ஐஇடி வெடிபொருளுடன் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சோ்ந்த முகம்மது முஸ்தாக்கிம் கானை 8 நாள்கள் காவலில் எடுத்து வைக்க தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி அளித்தது.
இதுகுறித்து நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘கைதான கானை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி பவன் சிங் ராஜாவத் முன் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 8 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி காவல்துறை தரப்பில் அனுமதி கோரப்பட்டது. மேலும், பெரிய அளவிலான சதித்திட்டம் குறித்த உண்மைகளை அறிவதற்கு அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, போலீஸாருக்கு எட்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து, சம்பந்தப்பட்ட நபரை ஆகஸ்ட் 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்.