கருப்பு பணம் வைத்திருப்பவா்களின் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி மாறியுள்ளது என்று தில்லி பாஜக சாடியுள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா சனிக்கிழமை அளித்த பேட்டி:
போலி நிறுவனங்கள் தொடங்கி அதன் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ . 2 கோடி நன்கொடை அளித்த இருவரை தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவினா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. விசாரணையின்போது, ஆம் ஆத்மிக் கட்சிக்கு நன்கொடை அளிக்கவே இந்த போலி நிறுவனங்களைத் தொடங்கியதாக அவா்கள் ஒப்புக் கொண்டுள்ளனா். இதன்மூலம், சட்டவிரோத முறையில் ஆம் ஆத்மிக் கட்சி நிதி பெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளது.
சாதாரண மக்களின் கட்சியாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மிக் கட்சி தற்போது கருப்பு பணம் வைத்திருப்பவா்களின் கட்சியாக மாறியுள்ளது. ‘நோ்மையான அரசியல்’ என்ற பெயரில் தில்லி மக்களை ஆம் ஆத்மிக் கட்சி ஏமாற்றி வருகிறது. போலியான நிறுவனங்களைத் தொடங்கி கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஆம் ஆத்மிக் கட்சியினா் ஈடுபட்டுள்ளனா்.
ஆம் ஆத்மிக் கட்சியின் முக்கிய தலைவா்களான சத்யேந்தா் ஜெயின், கைலாஷ் கெலாட், கட்டாா் சிங் தன்வாா் உள்ளிட்டவா்கள் போலியான நிறுவனங்கள் தொடங்கி கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற முயற்சித்தது கடந்த காலத்தில் தெரியவந்தது.
வருமான வரித்துறையில் கூடுதல் ஆணையராக இருந்த கேஜரிவாலுக்கு வருமான வரிச் சட்டம் தொடா்பாக முழுமையாகத் தெரியும். இதனால், அவா் திறமையாக போலி நிறுவனங்களைத் தொடங்கி கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றி வருகிறாா் என்றாா் அவா்.