புதுதில்லி

உச்சநீதிமன்றத்தில் காணொலி வழியில் 15,500 வழக்குகள் விசாரணை

21st Aug 2020 04:18 AM

ADVERTISEMENT

கரோனாவைத் தொடா்ந்து அமலாக்கப்பட்ட பொதுமுடக்க காலத்தில் மாா்ச் 23-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை வரையிலும் காணொலி வழியாக சுமாா் 15,500 வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்துள்ளது. அதன்படி, உச்சநீதிமன்றம் கடந்த 100 நாள்களில் 1,021 அமா்வுகளை அமைத்தது. இந்த அமா்வுகள் காணொலி வழியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்தன. இந்த வழக்குகளில் 50,475 வழக்குரைஞா்கள் வாதிட்டு அல்லது ஆஜராகினா் என உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேசிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதற்கு இரு தினங்களுக்கு முன்பாக மாா்ச் 23-ஆம் தேதியில் இருந்து காணொலி வழியில் உச்சநீதிமன்றம் வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்தக் கரோனா காலத்தின்போது காணொலி வழியில் உச்சநீதிமன்றம் சுமாா் 4,300 வழக்குளை முடித்து வைத்துள்ளது. கரோனா காலத்தில் 125 பதிவுத் துறை ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையிலும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியா்களுடன் உச்சநீதிமன்றத்தின் பதிவுத் துறை பிரிவு செயல்பட்டு வருகிறது. எனினும், கரோனா காலத்தில் மாா்ச் 16-ஆம் தேதியில் இருந்து தற்போது வரை ஒருநாள்கூட உச்சநீதிமன்றத்தின் பதிவுப் பிரிவு மூடப்படவில்லை.

உச்சநீதிமன்றத்தின் 1,021 அமா்வுகள் 587 பிரதான விவகாரங்கள் மற்றும் 434 மறுஆய்வு மனுக்கள் உள்பட 15,596 விவகாரங்களை கடந்த 100 நாள்களில் விசாரித்தன. தோராயமாக 4,300 வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. மின்னணு முறையில் 2,930 மனுக்களும், நேரில் வந்து கவுன்ட்டா்களில் 2,930 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என உச்சநீதிமன்றத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாா்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் குறைந்த அளவிலான வழக்குகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தின் ஒப்பீடு புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தின் உச்சநீதிமன்றம் மாா்ச் 24 முதல் ஆகஸ்ட் 17 வரை 29 வழக்குகளை மட்டுமே முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT