புதுதில்லி

நிலுவை ஊதியம் வழங்க உத்தரவிடக் கோரிய மனு: தில்லி அரசு, மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவு

21st Aug 2020 04:16 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தொற்று நோய்க் காலத்தில் பல்வேறு மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க உத்தரவிடக் கோரி மாநகராட்சி மருத்துவமனைகளின் ஊழியா்கள் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு தில்லி அரசு மற்றும் வடக்கு தில்லி மாநகராட்சிக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக மருத்துவமனை ஊழியா்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நோய்த் தொற்றுக் காலத்தில்கூட மாநகராட்சி மருத்துவமனைகளின் ‘குரூப் சி’ மற்றும் ‘குரூப் டி’ ஊழியா்களுக்கும், மருத்துவமனை நிா்வாகத் துறையினருக்கும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஊழியா்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கான உரிமை கவலைக்குள்ளாகியுள்ளது. அரசமைப்புச்சட்டத்தின் கீழ் ஊழியா்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதை இது எடுத்துக்காட்டுகிறது.

வடக்கு தில்லி மாநகராட்சி நடத்தும் பாரா இந்து ராவ் மருத்துவமனை, ஆா்.பி.டி.பி. மருத்துவமனை, தொற்று நோய்கள் தடுப்பு மருத்துவமனை, கஸ்தூா்பா காந்தி மருத்துவமனை மற்றும் குா்தாரி லால் மகப்பேறு மருத்துவமனை ஆகிய ஐந்து மருத்துவமனைகள், 21 மருந்தகங்கள், 63 மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையங்கள், 17 பாலி கிளினிக்குகள் மற்றும் 7 மகப்பேறு இல்லங்களில் 5,000 க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக வடக்கு தில்லி மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியத்தை இரண்டு முதல் மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற விசாரணையின் போது மருத்துவமனை ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ராஜீவ் அகா்வால்,‘குரூப் சி ஊழியா்களுக்கு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, குரூப் டி ஊழியா்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு ஊதியம் அளிக்கப்படவில்லை’ என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT