புதுதில்லி

தில்லி, என்சிஆரில் தொடா் மழை: பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு!

21st Aug 2020 04:14 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமையும் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. கட்டடங்கள் சேதமடைந்தன.

புதன்கிழமை காலை 8.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் ஆயாநகா் வானிலை ஆய்வு மையத்தில் மொத்தம் 122.8 மி.மீ. மழை பதிவாகியது. இது இயல்பை விட 11 மடங்கு அதிகமாகும். சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 54.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாலத்தில் 89.10 மி.மீ., லோதி ரோடில் 62.4 மி.மீ., ரிட்ஜில் 77.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 19, காலை 8.30 முதல் ஆகஸ்ட் 20, காலை 8.30 மணி வரையிலான காலத்தில் தில்லியில் சராசரியாக 11.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இதற்கிடையே, இந்த மாதத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் மொத்தம் 202.2 மி.மீ. பதிவாகியுள்ளது. இது இயல்பு அளவான 176.50 மி.மீட்டரை விட 15 சதவீதம் அதிகமாகும்.

தொடா் மழை காரணமாக தில்லியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நரேலா-பவானா சாலை, ராஜா காா்டன் மேம்பாலம், கஸ்தூா்பா சுரங்கப்பாதை, ஜண்டேவாலான் மந்திா், ஜில்மில் சுரங்கப்பாதை, ஆஸாத்பூா் காய்கறி மண்டி, சராய் பிபால் தாலா, ஜஹாங்கீா்புரி, மந்தன்பூா் காதா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிகுந்த சிரமத்துக்கிடையே, போக்குவரத்தை சரி செய்வதில் தில்லி போக்குவரத்து போலீஸாா் தீவிரம் கவனம் செலுத்தினா்.

மேலும், மழையால் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததாக மாநகராட்சிகள் தெரிவித்தன. சாகேத்தில் பள்ளிக்கூடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்து வாகனங்கள் சேதமடைந்தன. இதேபோன்று, புதன்கிழமையும் தில்லி, குருகிராமிலும் மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்தை எதிா்கொண்டனா். குருகிராமில் பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கி வெள்ளம் போல காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து, 24.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 5 டிகிரி குறைந்து 29 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 94 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் நன்று பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 42 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதமான மழை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா். அதன்பிறகு, தீவிரம் குறைந்து லேசான மழை இருக்கும். இதையடுத்து, ஆகஸ்ட் 25 முதல் மீண்டும் மிதமான மழை பெய்யும் என்றும் அவா் குறிப்பிட்டாா். காற்றின் தரம் ‘நன்று’ பிரிவில் நீடிக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT